பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


வழுதி என்று கூறப்படுகிறான். இதனால் இருவரும் ஒருவராக இருக்கலாம். இவன் ‘வெல்போர் வழுதி’ என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளான். ‘போர்வல் வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவனுக்குப் பகைவர்கள் பெறற்கரிய உயர்ந்த திறைப்பொருள்களைக் கொடுத்தனர். இப் போர்வல் வழுதி மேற்கூறப்பெற்ற சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுண்டு. [1] கடல்போன்ற பெரிய படையைக் கொண்ட ‘கலிமா வழுதி’ என்ற பெயரும் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைக் குறிக்கக்கூடும்.

புலிமான் வழுதி என்பவன் தன் மனைவி மக்களுடன் சென்று திருப்பரங்குன்றத்து முருகவேளை வழிபட்டதாகத் தெரிகிறது. அகநானூறு தொகுக்கப்படக் காரணமாக இருந்த உக்கிரப்பெரு வழுதிக்கு இப்பெயர் வழங்கியது என்று கருதலாம்.

5. பாண்டியன் என்னும் பெயருடைய அரசர்கள்

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

இவனது பாடல்களில் இரண்டு. சங்க நூல்களில் இடம் பெற்றுள்ள வகையில் புலவனாக இவன் நமக்கு அறிமுகமாகிறான். என்றாலும், இவனது வஞ்சினப் பாடலும் இவன் பெயருக்குமுன் உள்ள ‘ஒல்லையூர் தந்த’ என்னும் அடைமொழியும் இவன் சிறந்த அரசனாக நாடாண்டு வந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய பகைவர்களைப் புறம் காணாவிட்டால் தனக்குத் தன் மனைவியைப் பிரிந்து வாழும் நிலை நேரட்டும். அறநெறி தவறாத அரசவையில் திறமை இல்லாத ஒருவனை அமர்த்தித் தீமை செய்தவன் என்ற பழி நேரட்டும். மையற் கோமான் மாவன், எலாந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகிய ஐவருடனும் பிறருடனும் கூடி மகிழ்ந்திருக்கும் பேறில்லாமல் வறண்ட நிலத்தின் மன்னனாக அடுத்த பிறவி அமையட்டும் என்றெல்லாம் இவன் வஞ்சினம் கூறுமிடத்து இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன,[2] ஒல்லையூர் என்பது இப்பொழுது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த நாடு. இவன் அந்த நாட்டில் நடந்த போரின்போது இவ்விதம் வஞ்சினம் கூறினான். தான் கூறியவாறு ஒல்லையூர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இறந்ததற்காகப் பாணர்கள் பெரிதும் வருந்திய செய்தியைக் கூறும்

  1. 127
  2. 128