40
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
வில்லை. ஆனால் அக்காலத்து யவனர்கள் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து படியூரில் திருமணிகள் கிடைத்ததையும் அதை யவன வாணிகர் கப்பல்களில் வந்து வாங்கிக்கொண்டு போனதையும் அறிகிறோம். பிளைனி (Pliny) என்னும் யவனர் இச்செய்தியை எழுதியுள்ளார். இவர் படியூரை படொரஸ் (Paedoros) என்று கூறுகின்றார். படொரஸ் என்பது படியூரென்பதன் திரிபு. இச்சொல்லின் இறுதியில் அஸ் என்னும் விகுதியைச் சேர்த்திருக்கிறார். (படியூரைப்பற்றி Indian Antiquary Vol. V. p. 237 இல் காண்க). இந்தப் படியூர் மணிச் சுரங்கத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. மிகப் பிற்காலத்தில் கி.பி 1798 இல் இவ்வூர்வாசிகள் மறைவாக மணிக் கற்களை எடுத்தனர் என்று கூறப்படுகின்றது. இதை எப்படியோ அறிந்த ஒரு ஐரோப்பியன் கி. பி. 1819 - 20 இல் இந்தச் சுரங்கத்தை வாடகைக்கு எடுத்துத் தோண்டியதில் அந்த ஒரே ஆண்டில் 2196 மணிகள் (Beryls) கிடைத்தனவாம். அவை, 1201 பவுன் மதிப்புள்ளவையாம். பிறகு இந்தச் சுரங்கத்தில் நீர் சுரந்து அகழ முடியாமற் போய்விட்டது (Rice, EP. Car IV P.4).
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன.
புகழியூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் என்னும் புகழியூர் இருக்கிறது. இவ்வூருக்கு இரண்டுக் கல் தொலைவிலுள்ள ஆறு நாட்டார் மலை என்னும் குன்றில் இயற்கையாயுள்ள குகையிலே கற் படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. பிராமி எழுத்து கி.பி. முதல் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. பிராமி எழுத்துச் சாசனங்களில் ஒன்று கடுங்கோ என்னும் இரும்பொறையரசன் இளங்கோவாக இருந்த காலத்தில் செங்காயபன் என்னும் முனிவர் இந்தக் குகையில் வசிப்பதற்காகக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் என்றும் அவனுடைய மகன் இளங்கடுங்கோ என்றும் இந்தக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. இங்கு வேறு சில பிராமிக் கல்வெட்டெழுத்துகளும் உள்ளன.
ஆறு நாட்டார் மலைக்கு ஏழுகல் தூரத்தில் அர்த்தநாரிபாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூர் வயல்களுக்கு இடையில் பெரிய கற்பாறை ஐவர் சுனை என்று பெயர்