பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
409
வாகைப் பறந்தலைப் போர்
ஆய் எயினனுக்கும் நன்னது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனின் தலைநகர் பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி, ஆய் எயினனின் நகர் வாகையைக் கைப்பற்ற முயன்றான். வாகையைப் பாதுகாக்கப் பசும்பூண் பாண்டியன் தன் படைத்தலைவன் அதிகனை அனுப்பியிருந்தான். பாண்டியன் தலைவனான அதிகனுக்கும், ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. போரில் நன்னனுக்கு உதவியாகக் கொங்கர்கள் உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானையுடன் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் கொங்கர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.[1]
பொதியமலை வெற்றி
அதிகனை வென்று கொல்லிமலையில் யானைகளை வெற்றி உலாவரச் செய்தான் இப் பாண்டியன் என்பதை முன்னரே பார்த்தோம். அதுபோலவே, இவன் பொதியமலையைக் கைப்பற்றினான் போலும்,[2] இதன் பயனாகப் பொதியமலை அரசன் ஆய், அதிகனைப் போலப் பாண்டியனின் நண்பன் ஆனான். அதிகன் வாகைப் பறந்தலையில் பாண்டியனுக்காகப் போரிட்டது போலவே, ஆய் அரசன் கொங்கர்களை ஓட்டுவதில் பசும்பூட் பாண்டியனுக்கு உதவினான்.[3]
நெடுமிடல் படைத்தலைமை
பசும்பூண் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கியவன் நெடுமிடல் என்பவனாவான்.[4] பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் இப் படைத்தலைவனைக் கொன்ற பிறகு அரிமணவாயில் உறத்தூரில், கள்ளுடைப் பெருஞ்சோறு உண்டு வெற்றிவிழாக் கொண்டாடினர் என்று அறிகிறோம்.[5] இந்த நெடுமிடல் என்பவனுடன் கொடுமிடல் என்பவனும் மற்றொரு படைத்தலைவனாக இருந்தவன் எனத் தெரிகிறது. இவர்களைப் போரில் கொன்றவன் நார்முடிச் சேரல் என்று கூறப்படுகிறது.[6] இதைக் கருதுமிடத்துப் பசும்பூண் பாண்டியன் வடக்கில் கொல்லிமலை, தெற்கில் பொதியமலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட பெருநிலப்பரப்பை, அதிகன் முதலிய சிறப்பு மிக்க வள்ளல்களின் துணையுடன் அரசு புரிந்தான் எனக் கொள்ளலாம்.