பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச்சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான்.

நெடியோன் என்னும் பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவனாகவும், ‘நிலந்தருவின்’ நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன்நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிவம்பல நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர். பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவனை ‘ஆழி வடிவு அலம்ப நின்றான்’ என்று குறிப்பிடுகிறது. இந்நூல் இவனை யதுகுல அரசன் என்றும், ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூதுசென்றவன் என்றும், பாரதப் போரில் கலந்துகொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.

இந்திரன் ஆரம்பூண்ட பாண்டியன்

தேவர்கோனாகிய இந்திரன் எல்லா அரசர்களையும் விருந்திற்கு அழைத்தான். விருந்திற்குச் சென்ற அரசரெல்லாரும் இந்திரன்முன் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர். பாண்டியன் மாத்திரம் தலை தாழ்த்தி வணக்கம் செய்யாது, தன் பெருமிதம் தோன்ற நிமிர்ந்துசென்றான். இதைக்கண்ட இந்திரன் தன் முத்தாரத்தை அந்தப் பாண்டியனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினான்.

மழை பிணித்தாண்ட மன்னவன்

பாண்டியன் ஒருவன் இந்திரனுடைய தலையிலிருந்த முடி வளையை உடைத்து எறிந்தான். அதனாற் சினங்கொண்ட இந்திரன் தனது ஆணைக்குட்பட்டு நடந்துவந்த மேகங்களை அழைத்துப் பாண்டிய நாட்டில் பெய்யக்கூடாதென்று கூறித் தடுத்துவிட்டான். இதனால் பாண்டிய நாட்டில் மழையில்லாமல் போயிற்று. பாண்டியன் ஒருவன் அந்த மேகங்களைத் தடுத்து மழைபெய்யச் செய்தான்.

பொற்கைப் பாண்டியன்

இவனுடைய ஆட்சிக் காலத்தில் மதுரை நகரில் வாழ்ந்த கீரந்தை என்பான் தன்னுடைய மனைவியைத் தனியே வீட்டில்விட்டு வெளியூருக்குப் போனான். பாண்டியனுடைய ஆட்சி, தனித்திருக்கும்