பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ்செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம்.

“வட வாரியர் படை கடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரைசு சட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்"

என்பது அதன் வாசகம்.

கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த வெற்றியின் காரணமாக இவன் “ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்" என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுக் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் “அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்' என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர்.

நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்தார்? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது.

சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப்