பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளி னாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம்.

இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்:

“கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்த வென்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதற் றேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைக்கா ணகவயின். (வரி, 131 - 140)

இச் செய்தியையே இளங்கோவடிகள் கட்டுரை காதையில் மதுராபதி தெய்வத்தின் வாயிலாக மீண்டும் கூறுகிறார். பாண்டியன் கல்வி கற்றுப் புலமை வாய்ந்தவனாக இருந்தும், மனத்தை அடக்காமல் சிற்றின்பத்தில் நாட்டஞ் செலுத்தினான் என்றும், ஆனாலும் இவ்வொழுக்கம் அரச குடியில் பிறந்த இவனுக்கு இழுக்காகாது என்றும் மதுராபதி கூறியதாக இளங்ககோவடிகள் கூறுகிறார்:

"நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடும் ஆயினும்
ஒழுக்கொடு புணர்ந்த இவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந்த தாராது.” (கட்டுரைகாதை, 35-41.)

இந்த நெடுஞ்செழியனிடத்தில் இன்னொரு குறைபாடும். இருந்தது. அஃது அரசர்மாட்டிருக்கக் கூடாத குறைபாடு. நீதி