பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


மூடிக்கொண்டது.இச் செய்தி அரசன் செவிக்கு எட்டியது. பாண்டியன், தண்காலில் இருந்த அரச ஊழியர்களை யழைத்து விசாரித்தான் அப்போது முத்துப் பூணூலின் வரலாறு தெரிந்தது. அரசன் வார்த்திகனை விடுதலை செய்து தன் ஊழியர் ஆநீதி செய்ததற்குத்தண்டமாக அவனுக்கு வயலூரில் நிலத்தைத் தானஞ் செய்தான். பிறகு கொற்றவைக் கோயில் கதவு திறந்து கொண்டது. இச் செய்திகளைக் கட்டுரைகாதை (வரி, 61-131) யில் காண்க. இதனால், இவன் நீதி விசாரணையில் கண்டிப்பாக இராமல் தன் கீழ்ப்பட்ட ஊழியரிடத்தில் அதிகாரத்தை விட்டிருந்தான் என்பது தெரிகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பொது மக்களுக்கு இவன்மீது நம்பிக்கை போய் விட்டது. ஒரு சோதிட வார்த்தையும் உலவ ஆரம்பித்தது. அது,

“ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசு கேடுறும்”
(கட்டுரை. 133 136)

என்பது.

வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவியின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புக்க அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து,

“தாழ்பூங் கோதைத்தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு"

என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து