பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

427



“ஸ்ரீமத் திரமிள லங்கேஸ்மிம் நந்தி
லங்கேஸ்தி அருங்களா!
அன்வயோ பாதி நிஸ்ஸேடி ஸாஸ்த்ர
வராஹி பாரஹைஹி”

இந்தச் சுலோகத்திலே நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயம் என்னும் பிரிவு கூறப்படுதல் காண்க.

எனவே, சமண முனிவராகிய வச்சிர நந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் ஆகும்.

இதை அறியாமல் வையாவுரிப் பிள்ளையவர்கள், வச்சிர நந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதற் கோணல் முற்றுங்கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470- இல் தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார்.

கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற் செய்திகளையும், போர்ச் செய்திகளையும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு பிற நானூறு, முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ!