பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள கட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச்செய்தியைப் பெரிய புராணம் முதலிய நூல்களில் காண்கிறோம். எனவே, வையாபுரிப் பிள்ளை கூறுகிறபடி, வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் ஆட்களால் உண்டாக்கப்பட்டவை. இரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கூறுவது தவறாகும்.

பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி. பி. 300 க்குப் பிறகு இருந்திருக்க முடியாது. கி. பி. 300-க்கு முன்புதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும். இதனைத் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றைக்கொண்டு அறியலாம். ஏறக்குறைய கி. பி. 300- இல் களபரர் என்னும் அரசர் தமிழ்நாட்டிற்கு வந்து, சேர, சோழ, பாண்டியர் ஆகிய தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தக் களபரர் தமிழகத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள். களபரர் தமிழகத்தைக் கைப்பற்றிய பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர் களபரருக்குக்கீழ் அடங்கியிருந்தார்கள். களபரரின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்தது. பிறகு ஏறக்குறையக் கி. பி. 600-இல், கடுங்கோன் என்னும் பாண்டியன் களபரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டான். ஏறக் குறைய அதே காலத்தில், தொண்டை நாட்டிலிருந்த சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் களபரரை வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது, களபரருக்குக் கீழ் அடங்கியிருந்த சோழர், பல்லவர்களுக்குக்கீழ் அடங்கவேண்டியதாயிற்று. ஏறக்குறைய அதே காலத்தில் சேர நாடும் களபரர் ஆட்சியிலிருந்து சுயேச்சையடைந்தது. களபரர் ஆட்சிக் காலத்தில்தான் வச்சி ரநந்தி கி. பி. 470-இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். களபரர்கள் சமண, பௌத்தச் சமயங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆதரித்ததாகத் தெரியவில்லை. கி. பி. 470-இல் அரசாண்ட களபர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். எனவே, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் கி. பி.300-க்கும் 600-க்கும் இடைப்பட்ட காலத்தில்