42
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
புன்னாடு என்பதன் கிரேக்க மொழித் திரிபு என்று அறிஞர்கள் கண்டுள்ளனர். (‘Mysore and Coorg from Inscriptions’, z. Rice, Indian Culture, III., pp. 10, 146; Roman Trade With Deccan', Dr. B.A. Saletore in Proceedings of the Deccan History Conference First Hyderabad Session, 1945 pp. 303 - 317). நீலக்கல் வாணிகத்தினால் புன்னாட்டாருக்குப் பெரும் வருவாய் கிடைத்தது.
புன்னாட்டையடுத்து அதற்கு மேற்கில் இருந்தது துளு நாடு. அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்ட நன்னன் என்னும் அரசன் புன்னாட்டைக் கைப்பற்றிக்கொள்ள எண்ணி அதன்மேல் போர் செய்ய எண்ணினான். புன்னாட்டின் நீலக்கல் வாணிகம் நன்னனைக் கவர்ந்த காரணத்தால் அந்த வாணிகத்தின் ஊதியத்தைத் தான் பெறுவதற்கு அவன் எண்ணினான் என்று தெரிகிறது. இச்செய்தி தெரிந்தவுடன், நன்னனுடைய பகையரசனான சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்பவன் தன்னுடைய சேனைத் தலைவனாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினான் என்பவனைத் துளு நாட்டு நன்னனுக்கு எதிராகப் புன்னாட்டு அரசனுக்கு உதவிசெய்ய அனுப்பினான். ஆய் எயினன் புன்னாட்டு அரசனுக்கு உதவியாகச் சென்று, அவனை அஞ்ச வேண்டாம் என்று உறுதிமொழி கொடுத்ததோடு நன்னனுடைய துளு நாட்டின் மேல் படை எடுத்துச் சென்றான். நன்னனுடைய சேனாதிபதியான மிஞிலி என்பவன் பாழிப்பறந்தலை என்னும் இடத்தில் ஆய்எயினனுடன் போர் செய்தான். அந்தப் போரில் ஆய் எயினன் இறந்து போனான். “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகிற் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆஅ யெயினன், இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது” (அகம் 396: 2-6). “வெளியன் வேண்மான் ஆஅயெயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம் 208:5 -9). பிறகு, சேர அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்கும் நன்னனுக்கும் நடந்த போரில் நன்னன் தோற்றான். துளு நாடு, சேரன் ஆட்சிக்குக் கீழடங்கிற்று.
புன்னாட்டு அரசனும் கொங்கு நாட்டுச் சேரருக்குக் கீழடங்கினான். புன்னாட்டின் தலை நகரமான கட்டூரின் மேல், பெரும்பூண் சென்னி என்னும் சோழ அரசனுடைய சேனாதிபதி