பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்*[1]

தமிழ் நாட்டுக்கு மிக நெருக்கமாக உள்ளது இலங்கைத்தீவு. சங்க காலத்திலே தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. அக்காலத்திலே தமிழர் இலங்கையில் சென்று தங்கினார்கள்; தங்களுடைய தெய்வ வணக்கத்தையும் இலங்கையில் நிறுவினார்கள். பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னமே சங்க காலத் தமிழர் தமது தெய்வ வழிபாட்டினை இலங்கையில் நிறுவினர். பௌத்தமதம் இலங்கைக்கு முதன்முதலாக வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தேவனாம்பிரிய தில்ஸன் என்னும் அரசன் காலத்திலாகும். அக்காலத்தில் பாரத நாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, மகேந்திரன் சங்கமித்திரை என்னும் பிக்கு பிக்குணிகளைக் கொண்டு பௌத்த மதத்தை இலங்கையில் பிரசாரம் செய்வித்தார். பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே தமிழருடைய தெய்வ வழிபாடு அங்குச் சென்று நிலைப்பெற்றிருந்தது.

‘மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையான் சொல்லியும் படுமே'

என்பது தொல்காப்பிய (அகத்திணையியல் 5-ஆம்)

முல்லை நிலத்தில் திருமால் வணக்கமும், குறிஞ்சி நிலத்தில் முருகன் வணக்கமும், மருத நிலத்தில் இந்திரன் வணக்கமும், நெய்தல் நிலத்தில் வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலே அக்காலத்திலே நிகழ்ந்தன. இந்தத் தெய்வங்களின் வழிபாடு அக்காலத்திலே இலங்கையிலும் பரவி, அக்காலத்தில் அங்கிருந்த இயக்கர், நாகர்,


  1. சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் (1970) நூலில் உள்ள கட்டுரை.