44
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
எருமை நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தது. “நேரா வன்றோள் வடுகர் பெருமகன், பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை, அயிரி ஆறு” (அகம் 253: 18 - 20), “கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, அயிரை யாற்றடைகரை வயிரின் நரலும் காடு” (அகம் 177 : 10 - 11). இந்த அயிரி ஆறு, சேர நாட்டில் அயிரி மலையில் தோன்றுகிற அயிரி ஆறு (பெரியாறு) அன்று.
தலையாலங்கானம் என்னும் ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும் போர் செய்தபோது சோழ, சேரர்களுக்குத் துணையாக இருந்த ஐந்து வேள் அரசர்களில் எருமையூரனும் ஒருவன் (அகம் 36 :13 - 20). எருமையூரன் வடுகர் பெருமகன் என்று கூறப்படுகின்றான்.
ஹொய்சள அரசர் காலத்திலும் எருமை என்னும் பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டிருந்ததென்பதை அவ்வரசர்களுடைய சாசன எழுத்திலும் காண்கிறோம் (Erumai = Erumainadu of Tamil Literature and Erumainadu of the Hoysala Records, Epi. Car., X c. w. 20).
எருமையூர் என்னும் பெயர் பிற்காலத்தில் மைசூர் என்று வழங்கப்பட்டது. எருமை என்பதற்குச் சமஸ்கிருதச் சொல் மகிஷம் என்பது. எருமை ஊர் மகிஷஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று. மைசூர் (எருமையூர்) என்னும் இவ்வூரின் பெயர் மிகமிகப் பிற்காலத்தில் கன்னட தேசம் முழுவதுக்கும் பெயராக மைசூர் என்று அமைந்துவிட்டது.
துவரை (துவார சமுத்திரம்)
இதுவும் இப்போதைய தெற்கு மைசூரில் இருக்கும் ஊர். இப்போது ஹளெபீடு என்று பெயர் பெற்று இருக்கிறது. (ஹெளெ பழைய, பீடு - வீடு. அதாவது, பழைய படைவீடு என்பது பொருள். படைவீடு - பாடிவீடு, பாசறை). இப்பொழுதும் துவரையில் துவாரசமுத்திரம் என்னும் பெரிய ஏரி இருக்கின்றது. இங்கு அரையம் என்னும் ஊரில் இருங்கோவேள் அரச பரம்பரையார் இருந்து அரசாண்டார்கள். அந்த அரையம் என்னும் நகரம் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. இருங்கோவேள் அரசர் புலிகடிமால் என்று பெயர்பெற்றிருந்தார். (இந்தப் புலிகடிமால் அரசராகிய இருங்கோவேள் அரசரின் சந்ததியார் பிற்காலத்தில்