பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

455


போலத் தெரிந்தனவாம். இந்த வருணனைச் சிங்கள மக்களும் தமிழரும் வழிபட்டனர். சிங்க அரசர்கள் இக்கோவிலைப் போற்றி மானியம் அளித்துப் பாதுகாத்தார்கள். ஆண்டு தோறும் அந்தக் கோவிலிலே வருணனுக்குத் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் வருணனுக்கு உரிய முத்துக்குடை ஊர்வலமாகக் கொண்டு போகப்பட்டது.

இலங்கைத் தீவிலே தேவ நுவரப் பட்டினத்தில் இருந்த வருணன் கோவிலைப்பற்றிய வியப்பான செய்தி என்னவென்றால், அந்தக் கோவிலை அங்கே முதுன் முதலாக அமைத்தவன் கப்பல் வாணிகனாகிய தமிழ் நாட்டுத் தமிழன் என்பதே. இச் செய்தியை இலங்கைச் சரித்திர நூல்கள் கூறுகின்றன. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அந்த வருணன் கோவிலில் பூசை முதலிய வழிபாடுகளைச் செய்தவர்களும் தமிழர்களே!

வருணனைச் சிங்களவர் உபுல்வன் என்று கூறினர். உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்று ஆயிற்று என்பர். உதகபாலன் என்றால் நீரை ஆட்சி செய்கிறவன் என்பது பொருள். அதாவது நீர்க் கடவுள். சிங்கள இலக்கண முறைப்படி உதகபால என்பது உதபால என்றாகிப் பின்னர் உபுல என்றாயிற்று என்பர். வருணன் என்பது வணன் என்றாகிப் பின்னர் வணன் என்பது வன் என்றாயிற்று என்பர். எனவே உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்றாயிற்று.

தேவ நுவரவிலிருந்து வருணனைப் பிற்காலத்திலே கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் விஷ்ணு (திருமால்) ஆக மாற்றிவிட்டனர். வருணனை விஷ்ணுவாக மாற்றியவர்கள் தமிழர்களே. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் காபர் என்னும் முகமதியன் தில்லியிலிருந்து தென்னாட்டுக்கு வந்து கோவில்களைக் கொள்ளையடித்து நாசப்படுத்தினான் என்னும் செய்தி சரித்திரம் கூறும் உண்மை. அக்காலத்திலே, தமிழ் நாட்டிலே இருந்த சில வைணவப் பிராமணர்கள் தங்கள் குடும்பத்தோடு இலங்கைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அவர்களைச் சிங்கள அரசன் ஆதரித்து தேவ நுவர வருணன் கோயிலில் பரிசாரக வேலை செய்யும்படி அமர்த்தினான். அந்த வைணவப் பிராமணர்கள் நாளடைவில் பையப்பைய வருணனை