பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


இலங்கை நூல்கள் கூறுகிற இந்தச் செய்தியைப் புத்தருடைய வரலாறு கூறவில்லை. ஆகையால், இது ஒரு கற்பனைக்கதை என்று தெரிகிறது. புத்தர், கொடியவரையும் நல்லவராக்கி அவர்களுக்குப் பௌத்தக் கொள்கையை உபதேசித்தார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது. ஆனால், இலங்கை நூல்கள் அவர் அப்படிச் செய்யாமல் இயக்கரை வேறுதீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன.

இயக்கரை வேறுதீவுக்கு ஓட்டியபிறகு தேவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்களுக்குப் புத்தர் திரிசரணம், பஞ்சசீலம் முதலான உபதேசகங்களைச் செய்தார் என்றும், இந்நூல்கள் கூறுகின்றன.18 இந்தத் தேவர்கள் யார், எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்று இந்நூல்கள் கூறவில்லை. இலங்கையிலிருந்த இயக்கரைத் துரத்திவிட்டுத் தேவருக்குத் தருமோபதேசம் செய்த புத்தர் மீண்டும் வடஇந்தியாவுக்குப் (உருவேல் என்னும் இடத்துக்குப் போய்விட்டார்.19 இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஆதிகாலத்தில் இலங்கையில் இயக்கர் என்னும் பழங்குடிமக்கள் பெருவாரியாக வாழ்ந்திருந்தனர் என்பதே இயக்கர்கள் இலங்கையிலிருந்து கிரித் தீவுக்கு ஓட்டப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகிறபோதிலும், இயக்கர்கள் எல்லோரும் இலங்கையை விட்டுப் போய்விடவில்லை. ஏனென்றால், இயக்கரும் அவர்களுடைய அரசர்களும் இலங்கையில் பிற்காலத்திலும் வாழ்ந்திருந்தனர் என்பதை மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றன.

இலங்கையில் அந்தப் பழங்காலத்திலே நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்ததையும் நாக அரசர்கள் அவர்களை ஆண்டு ஆட்சி செய்ததையும் தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. புத்தர் வடஇந்தியாவில் ஜேதவனம் என்னும் இடத்தில் இருந்தபோது (அவர் புத்த பதவியடைந்த ஐந்தாவது ஆண்டில்) இலங்கையில் இருந்த நாகர் குலத்து அரசர்களான மகோதான், குலோதான் என்பவர்கள் ஒரு மணியாசனத்துக்காகப் போர் செய்யப்போவதையறிந்து, அவர்கள் மேல் இரக்கங்கொண்டு புத்தர் இலங்கைக்குவந்து அவர்களுடைய போரை நிறுத்தித் தருமோபதேசம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.20

இலங்கையின் வடக்கில் கடல் பிரதேசத்தில் (இப்போதைய யாழ்ப்பாணத்தில்) நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.