பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

475


விசயனும் அவனுடைய 700 தோழர்களும் கப்பலில் வந்து இலங்கையில் தம்பபாணி என்னும் இடத்தில் தங்கினார்கள். அவர்கள் தங்கினஇடம் இப்போது அநுராதபுரம் உள்ள இடத்தைச் சார்ந்திருந்தது. அது இயக்கர் வாழ்ந்த இடம். இயக்க அரனுடைய மகளான குவண்ணி என்பவளோடு விசயன் தொடர்புகொண்டு, அவளுடன் வாழ்ந்தான். குவண்ணி, இயக்கநாட்டை விசயன் கைப்பற்றுவதற்கு உதவிசெய்தாள். அவளுடைய உதவியினாலே, விசயனும் அவனுடைய தோழர்களும் இயக்க அரசனைக் கொன்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய இயக்கருடைய தலைநகரத்தின் பெயர் ‘சிர்சவத்து’ என்பது.25 விசயனுடைய தோழர்கள் ஆங்காங்கே கிராமங்களை அமைத்துக்கொண்டனர். அநுராதன் என்பவன் கடம்ப நதிக்கரையில் (இப்போதைய மல்வட்டெஓயா) அநுராத கிராமத்தையும், உபதிஸ்ஸன் கிராமத்தையும் உண்டாக்கினார்கள். உச்சேனி, உருவேலா, விஜிதம் முதலான ஊர்களையும் அமைத்தார்கள்.26

பாண்டிநாட்டுத் தொடர்பு

இயக்க அரசன் மகளான குவண்ணிக்கும் விசயனுக்கும் ஓர் ஆணும் பெண்ணும் பிறந்திருந்தனர். விசயனுடைய தோழர்கள், விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்க விரும்பினார்கள். அவர்கள் தங்கள் எண்ணத்தை அவனுக்குக் கூறினபோது, அவன் இயக்க குலத்துக் குவண்ணியை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பவில்லை. நல்ல அரசகுலத்து மகளை மணந்து அவளை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பினான். அவனுடைய தோழர்கள் எண்ணிப்பார்த்து இலங்கைக்கு அக்கரையில் உள்ள பாண்டிநாட்டு அரசனிடம் மகள் கேட்க, முத்து மணிகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்துத் தூதர்களை அனுப்பினார்கள். தூதர்கள் மதுரைக்குச்சென்று பாண்டியன் மகளை விசயனுக்கு மணம்செய்விக்கக் கேட்டார்கள். பாண்டியன் அமைச்சர்களோடு கலந்து ஆய்ந்து தன்மகளை மணஞ்செய்விக்க இசைந்தான். மற்ற எழுநூறு தோழர்களும், பாண்டிநாட்டில் பெருங்குடி மக்கள் வீடுகளிலிருந்து மணப்பெண்களை மணம்பேசி முடித்தனர். மதுரையிலிருந்து பாண்டியன் மகளும் மற்ற மணப்பெண்களும் பரிவாரங்களோடும் யானை, குதிரை, தேர் முதலானவற்றோடும் பதினெட்டு வகையான கைத்தொழில் செய்யும் சாத்தர்களோடும் அவர்களைச்