பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


சார்ந்த ஆயிரம் குடும்பங்களோடும் இலங்கைக்குச் சென்றனர். சென்றவர்களை விசயனும் அவனுடைய தோழர்களும் வரவேற்று அவர்கள் தங்குவதற்குரிய இடங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.

விசயன் குவண்ணியையும் அவளுடைய மக்களையும் துரத்திவிட்டான். தங்கள் அரசனையும் நாட்டையும் காட்டிக்கொடுத்த குவண்ணியை இயக்கர்கள் கொன்றுவிட்டார்கள். பிறகு விசயனும் அவனுடைய தோழர்களும்முறையே பாண்டிய அரச குமாரத்தியையும் பாண்டிநாட்டு மகளிரையும் திருமணஞ்செய்து கொண்டார்கள். தோழர்கள் விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்கினார்கள்.27

பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டு முடிசூடிய விசயன் தன் மாமனாகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு இலட்சம்) பொன் மதிப்புள்ள முத்துகளைக் காணிக்கையாகச் செலுத்திவந்தான். விசயன் 38 ஆண்டுகள் அரசாண்டான்.28

இவ்வாறு கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலே இலங்கையரசனுக்கும் பாண்டிய அரசனுக்கும் அரசியல்தொடர்பும் திருமணத்தொடர்பும் ஏற்பட்டது.

விசயன் இலங்கை முழுவதும் அரசாளவில்லை. விசயன், அநுராதபுரத்தைச் சூழ்ந்துள்ள நாட்டை அரசாண்டான். இலங்கையின் மற்ற இடங்களை இயக்கரும் நாகரும் அரசாண்டார்கள். இலங்கையின் வடபகுதியாகிய நாகநாட்டை (யாழ்ப்பாணப் பிரதேசம்) நாக அரசனும், கலியாணி நாட்டை இன்னொரு நாக அரசனும், மலைய நாட்டையும் உரோகண நாட்டையும் வேறுவேறு அரசர்களும் அரசாண்டார்கள். மகாவலி கங்கை என்னும் ஆற்றின் வடகரைக்கும் நாகநாட்டின் தென்எல்லைக்கும் இடையில் இருந்த சிங்களநாட்டை விசயன் அரசாண்டான். விசயன் கி.மு. 483 முதல் 443 வரையில் 38 ஆண்டுகள் அரசாண்டான் என்பர். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. பாண்டிநாட்டிலிருந்து மணமகளிரோடு இலங்கைக்குச்சென்ற 18 வகையான தொழிலாளிகள் இலங்கையின் தலைநகரத்தை அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.

விசயன் இறந்த பிறகு, ஓராண்டு வரையில் சிங்கள இராச்சியத்தை அவனுடைய அமைச்சர்கள் அரசாண்டார்கள். அப்போது நாட்டுக் குடிமக்களான இயக்கர், அரசியல் காரணமாகக் கலகஞ்செய்தனர்