பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

479



உரோகண நாட்டில் பாண்டியர் ஆட்சி

பாண்டுகாபயன் காலத்திலோ, இவன் காலத்துக்கு முன்போ, இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்தில் உள்ள உரோகண நாட்டில், பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்தவர் வந்து அந்நாட்டையும் அதற்கு வடக்கேயுள்ள கிழக்கு இலங்கையையும் கைப்பற்றி அரசாண்டனர். அவர்களைப்பற்றிய வரலாற்றைத் தீபவம்சமும் மகாவம்சமும் பேசவில்லை அந்தப் பாண்டிய குலத்து அரசர்கள் உரோகண நாட்டிலே நிலைகொண்டு அப்பகுதிகளை அரசாண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வழியினர் பிற்காலத்தில் எழுதிவைத்த பிராமி எழுத்துச் சாசனங்களிலிருந்து அவர்களைப்பற்றி ஒருவாறு அறிகிறோம்.

பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் கி.மு. 307 இல் காலமான பிறகு, அவனுடைய மகனான முட்டசிவன் அநுராதபுரத்தில் சிம்மாசனம் ஏறிச் சிங்கள இராச்சியத்தை அரசாண்டான். சிவன் என்று பெயர் பெற்றிருந்தமையால் இவன் சைவ சமயத்தவன் என்று கூறலாம். இவன் சிங்கள இராச்சியத்தை அறுபது ஆண்டுகள் (கி.மு. 307 (கி.மு. 307 - 247) அரசாண்டான். இவன் ஆட்சிக்காலத்திலும் இலங்கையைச் சேர்ந்த உரோகண நாட்டில் பாண்டிய குலத்தார் அரசாண்டு கொண்டிருந்தார்கள். உரோகண நாட்டில் மாகாமம் (மகாகிராமம்) என்னும் ஊரைத் தலைநகரமாக்கிக்கொண்டு அவர்கள் அரசாண்டார்கள். முட்டசிவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாவது மகனான திஸ்ஸன் அரசாண்டான். திஸ்ஸனைத் தேவனாம்பிய திஸ்ஸன் (தேவனாம்பிரிய திஸ்ஸன்) என்று கூறுவர். தேவனாம்பிரிய திஸ்ஸன் கி.மு. 247 முதல் 207 வரையில் அரசாண்டான்.

பாரத தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியும் திஸ்ஸனும் சமகாலத்தில் இருந்த அரசர்கள். அசோகச் சக்கரவர்த்தி, ‘தேவனாம்பிரியின்’ என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தது போலவே, இலங்கையையாண்ட திஸ்ஸனும் ‘தேவனாம்பிரியன்’ என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தான். திஸ்ஸன், தூதரை அசோகச் சக்கரவர்த்தியிடம் அனுப்பி, பகவான் புத்தர் போதிஞானம் பெற்ற போதிமரத்தின் கிளையை இலங்கைக்கு அனுப்பும்படியும், பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்வதற்காகச் சங்கமித்திரை முதலான பௌத்தப் பிக்குகளை அனும்பும்படியும் கேட்டுக்கொண்டான்.