பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


அவ்வாறே அசோகச் சக்கரவர்த்தி போதிமரக் கிளையையும், பிக்குணிகளையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தார்.34 இதற்கு முன்பே அசோக சக்கரவர்த்தி மகிந்தன் (மகேந்திரன்) என்னும் பிக்குவை இலங்கைக்கு அனுப்பி பௌத்தமதப் பிரசாரம் செய்வித்திருந்தார்.35 திஸ்ஸ அரசன் புத்தகயாவிலிருந்து வந்த போதிமரக் கிளையை அநுராதபுரத்தில் நட்டபோது அந்த விழாவிற்கு இலங்கையில் இருந்து அரசர்களும் பெருமக்களும் வந்திருந்தார்கள். அவர்களில் கஜர காமத்திலிருந்து (கதிர்காமத்திலிருந்து - அதாவது உரோகண நாட்டிலிருந்து) அதன் பெருமக்களும் வந்திருந்தனர்.36 மகாவம்சம், கதிர்காமப் பெருமக்கள் என்று கூறகிறதே தவிர அவர்களின் பெயரைக் கூறாமலே மறைத்துவிட்டது. கதிர்காமத்துப் பெருமக்களில் உரோகணநாட்டுப் பாண்டிய குல அரசனும் முக்கியமானவன் என்பதில் ஐயமில்லை. மகாவம்சம் உரோகணநாட்டுப் பாண்டியகுல அரசர்களைக் கூறாமல் விட்டபோதிலும், வேறு இடத்திலிருந்து இந்தப் பாண்டியரின் செய்திகள் கிடைக்கின்றன.

உரோகண நாட்டில் அரசாண்டிருந்த பாண்டியகுலத்து அரசரை, தேவனாம்பிரிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன்கொன்று அந்த இராச்சியத்தைக் கைப்பற்றினான். மகாநாகனுக்கு உபராச மகாநாகன் என்னும் பெயரும் உண்டு. இவன் எப்படி உரோகண நாட்டுப் பாண்டியப் பரம்பரையை அழித்தான் என்பதைக் கூறுவதற்கு முன்பு, அந்தப் பாண்டிய குலத்தரசரைப் பற்றிக் கூறுவோம்.

இலங்கைத் தீவின் தென்கிழக்கில் உரோகணநாடு இருக்கிறது. அதன் பழைய தலைநகரம் மாகாமம் (மகாகிராமம்) என்பது. அதன் துறைமுகப்பட்டினம் சம்பந்திட்டை. இக்காலத்தில் அது ஹம்பந்தோட்டம் என்று கூறப்படுகிறது. சம்பந்திட்டை பழங்காலத்தில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமாக இருந்தது. உரோகண நாட்டின் மற்றொரு தலைநகரம் கதிர்காமம். கதிர்காமத்தைச் சிங்கள நூல்கள் கதரகாமம் என்றும், கஜரகாமம் என்றும் கூறுகின்றன. கதிர்காமம், முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றது. மாணிக்க கங்கை என்னும் ஆற்றின் அருகில் கதிர்காமக் கோயில் இருக்கிறது. அந்தப் பழங்காலத்தில், கதிர்காமக்கோயில் ஒரு குன்றின்மேல் இருந்தது. தமிழர் முருகனைக் குன்றின் மேல்வைத்து வணங்குவது வழக்கம். உரோகண நாட்டை யரசாண்ட பாண்டிய குலத்தவர் கதிர்காம முருகனைப் பழைய