பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

485


கொண்ட துரோகச் செயலையும், மகாநாகனுடைய மகன், காமணி திஸ்ஸனுடைய மக்கள் பதின்மரைக் (தசபாதிகர்) கொன்று தானே உரோகண நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதையும் கூறாமல் அடியோடு மறைத்துவிட்டது. ஆனால், மகாவம்சம் மறைத்துவிட்ட வரலாற்றைத் தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது.

மகாநாகனுக்கு அட்டாலய திஸ்ஸன் என்னும் ஒரு மகன் பிறந்தான் என்று கூறினோம். மகாநாகனுக்கு உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அபயங்கொடுத்து ஆதரித்து அவனுக்கு ஜாவகநாயகன் என்னும் சிறப்புப்பெயர் அளித்துக் காப்பாற்றினான். பிறகு மகாநாகனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்குக் கோதாபயன் என்றும், அய்யஅபயன் என்றும், அபயன் என்றும் பெயர் உண்டு. தனக்குப் புகலிடங்கொடுத்துக் காப்பாற்றிய காமணி அபயன் (மச்சராசன்) காலமான பிறகு, மகாநாகன் உரோகணநாட்டு ஆட்சியைத் தானே கவர்ந்துகொண்டான். காமணி அபயனுக்குப் பத்துக் குமாரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குத் தசபாதிகர் (பத்துச் சகோதரர்கள்) என்பது பெயர் என்றும் கூறினோம். காமணி அபயனுக்குப் பிறகு அவர்களே உரோகணநாட்டு ஆட்சிக்கு உரியவர்கள். ஆட்சியை அவர்களிடம் கொடுக்காமல் மகாநாகன் உரோகணநாட்டு ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொண்டான். பிறகு மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் (அபயன்) தசபாதிகரைக் கொன்று உரோகண நாட்டைத் தானே கைப்பற்றிக் கொண்டான். கைப்பற்றிக் கொண்டபிறகு, கோதாபயன் தான்செய்த மகாபாதகத்தைக் கழுவுவதற்காகப் பல பௌத்த விகாரைகளைக் கட்டினான் என்று தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது.9 உரோகண நாட்டை அரசாண்ட பழைய பாண்டியர் ஆட்சி இவ்வாறு அழிக்கப்பட்டது. அவர்களுடைய கால்வழியைப் பின்னர் விளக்குவோம்.

மகாநாகனும் அவனுடைய மகனும் உரோகண நாட்டைத் துரோகமாகக் கைப்பற்றி அரசாண்டபோது இராஜராட்டிரத்தைத் (அநுராதபுரம் இராச்சியத்தை) தேவனாம்பிரிய திஸ்ஸன் அரசாண்டான். அவன் கி.மு.247முதல் 207 வரையில் நாற்பது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாவது தம்பியான உத்தியன் கி.மு. 207 முதல் 197 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப்பிறகு அனுடைய தம்பியான மகாசிவன் கி.மு. 197 முதல் 187 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.