பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

49


இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங்களையும் பூழி நாட்டையும் கொங்குச் சேரர்களுக்குக் கொடுத்தார்கள் என்று தெரிகின்றது. பிறகு, பூழிநாடும் அதன் துறைமுகப் பட்டினங்களும் கொங்குச் சேரர்களிடம் இருந்தன.

கொங்கு நாட்டரசர்கள் பூழியர்கோ என்றும் பூழியர் மெய்ம்மறை என்றும் கூறப்பட்டனர். செல்வக்கடுங்கோ வாழியாதன்,

“ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்”
(புறம்.387-28-30)

என்று கூறப்படுகின்றான். அவனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை ‘பூழியர் மெய்ம்மறை’ (8ஆம் பத்து 3: 13) என்று கூறப்படுகின்றான். அவனுக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை ‘பூழியர் கோவே’ என்றும் (9ஆம் பத்து 4:6) ‘பூழியர் மெய்ம்மறை’ என்றும் (9ஆம் பத்து 10:27) கூறப்படுகின்றான். இதனால் கொங்குச் சேரர் பூழி நாட்டையும் அதனைச் சேர்ந்த மாந்தை, தொண்டி என்னுந் துறைமுகப்பட்டினங்களையும் வைத்திருந்தனர் என்பது தெரிகின்றது.

பூழி நாடு மேற்குக் கடற்கரையோரத்தில் துளுநாட்டுக்குத் தெற்கிலும் சேரநாட்டுக்கு வடக்கிலும் அமைந்திருந்ததையறிந்தோம். இந்த நாட்டின் இயற்கை வளத்தையும் இங்கிருந்த தொண்டித் துறைமுகத்தையும் குறுங்கோழியூர்கிழார் கூறுகின்றார்.

“குலையிறைஞ்சிய கோள்தாழை,
அகல்வயல் மலைவேலி
நிவந்த மணல் வியன்கானல்
தெண்கழிமிசைத் தீப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந”
(புறம். 17:9 - 13)

கடலை மேற்கு எல்லையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும் கொண்ட இந்த நாடு, தாழை (தென்னை) மரச்சோலைகளும் அகன்ற நெல் வயல்களும் கடற்கரை உப்புக்கழிகளும் உடையதாய், தொண்டித் துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது என்று இதனால் தெரிகின்றது.