பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



சந்தமுக சிவனடைய தம்பியான அசலாலக திஸ்ஸன், சந்தமுக சிவனைக்கொன்று அரசாட்சியைக் கைப்பற்றி ஏழு ஆண்டு எட்டுத் திங்கள்கள் (கி.பி. 110-118) அரசாண்டான். அசலாலக திஸ்ஸனும் அவனுடைய அரண்மனைக் காவலனான சுபன் என்பவனும் உருவத்தில் ஒரேவிதமாகக் காணப்பட்டனர். இவர்களைக் கண்டவர் இவர்களில் யார் அரசன், யார் காவற்காரன் என்பதை அறிய முடியாமலிருந்தனர். சில சமயங்களில் அசலாலக திஸ்ஸன், காவற்காரனாகிய சுபனை அரசவேடத்தில் சிம்மாசனத்தில் வைத்துத் தான் காவற்காரன் உடையில் வாயிலில் நிற்பான். அமைச்சர் முதலானவர் வந்து சிம்மாசனத்தில் இருக்கும் காவற்காரனை உண்மையரசன் என்று கருதி அவனை வணங்குவார்கள். அதனைக் கண்டு காவற்காரனாக நிற்கும் உண்மையரசன் நகைப்பான். இவ்வாறு பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் இவ்வாறு நிகழ்ந்தபோது, சிம்மாசனத்தில் இருந்த காவற்காரனாகிய சுபன், காவற்காரன் உடையில் இருந்த அசலாலக திஸ்ஸனைச் சுட்டிக்காட்டி, ‘இவன் ஏன் மரியாதையில்லாமல் நகைக்கிறான்? இவனைக் கொண்டு போய்த் தலையை வெட்டுங்கள்’ என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அதன்படியே அவன் கொல்லப்பட்டுக் காவற்காரனாகிய சுபன் அரசாட்சிசெய்தான். அரசாட்சிக்கு வந்தபோது சுபன், சுபராசன் என்று பெயர்பெற்றான். சுபராசன் இலங்கையை ஆறு ஆண்டுகள் (கி.பி. 118-124) அரசாண்டான்.

இலம்பகன்னர் ஆட்சி

சுபராசன் ஆட்சிக் காலத்தில் நிமித்திக வதந்தியொன்று நாடெங்கும் பரவிற்று. 'வசபன் என்னும் பெயருள்ளவன் ஒருவன், சுபராசனை வென்று அரசாளப் போகிறான்' என்பது அந்தவதந்தி.14 இந்த நிமித்திக வதந்தியைக் கேட்ட சுபராசன், நாட்டில் உள்ள வசபன் என்னும் பெயருள்ளவர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அவ்வாறே வசபன் என்னும் பெயர்கொண்டவர் கொல்லப்பட்டார்கள். சுபராசனுடைய சேனையிலே வசபன் என்னும் பெயருள்ள போர் வீரன் ஒருவன் இருந்தான். அவன், தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சி அநுரையிலிருந்து தப்பிஓடி மலையநாட்டுக்குச் சென்றான். சென்றவன் அங்கே ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அநுராதபுரத்தின்மேல் படையெடுத்துவந்து போர் செய்தான். சுபராசன் போரில் தோற்றான். வசபன் அரசாட்சியைக்