பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

501


கைப்பற்றி இலங்கையை நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 124-168) அரசாண்டான் (மகாவம்சம் 35 : 51- 100). வசபன், இலம்பகன்னர் இனத்தைச் சேர்ந்தவன். இலம்பகன்னர் பாண்டி நாட்டுத் தமிழ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், பாண்டி நாட்டிலிருந்து வட இலங்கையில் குடியேறி அரச ஊழியம் செய்தவர் என்றும் தெரிகின்றது. வசபன், இலம்பகன்னர் ஆடசியைத் தொடங்கிய முதல் அரசன். இலம்பகன்னர் என்பதன் பொருள் நீள்செவியர் என்பது. அந்த இனத்தார் காதுகளைத் தொங்கும்படி நீட்டி வளர்த்தபடியால் இலம்பகன்னர் என்று பெயர்பெற்றனர். (லம்ப - நீளம், கன்னர் - கர்ணர், செவியையுடையவர்.) தமிழர்களில் சில இனத்தவர் காதுகளை நீளமாகத் தொங்கும்படி வளர்த்தனர். இலம்பகன்ன இனத்தவனாகிய வசபனுக்குப் பிறகு அவனுடைய மகனான வங்கநாசிக திஸ்ஸன் இலங்கையை அரசாண்டான்.

வங்கநாசிக திஸ்ஸன் சுபராசனுடைய மகளான மகாமத்தா என்பவளைத் திருமணஞ் செய்திருந்தான். அவன் இலங்கையை மூன்று ஆண்டு (கி.பி. 168-71) அரசாண்டான். (இவன் காலத்தில், சோழநாட்டை அரசாண்ட சோழன் கரிகால்வளவன், இலங்கைமேல் படையெடுத்துச் சென்று பன்னிரண்டாயிரம் சிங்களவரைச் சிறைப் படுத்திக் கொண்டுபோய்க் காவிரிக்குக் கரைகட்டினான் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மையென்று தோன்றவில்லை. இலங்கையின் பழைய நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் இச்செய்தியைக் கூறவில்லை. கரிகால் வளவன்மேல் பாடப்பட்ட பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை. பிற்காலத்தவையான சிங்க நூல்களும் தமிழ் நூல்களுந்தாம் இதனைக் கூறுகின்றன. எனவே, கரிகாலன் இலங்கைமேல் போர்செய்தான் என்பதும், கஜபாகு அரசன் சோழநாட்டின்மேல் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாற்று நிகழ்ச்சிகள் என்று கருதுவதற்கில்லை). இந்தக் காலத்தில் இலங்கையின் வடக்கிலிருந்த நாகநாட்டை (இப்போதைய யாழ்ப்பாண நாடு) வளைவணன் என்னும் நாகராசன் அரசாண்டான். நாகர் திராவிட இனத்தவர். வளைவணனுடைய அரசியின் பெயர் வாசமயிலை. இவர்களின் மகள் பீலிவளை. பீலிவளை நாகநாட்டிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த நெய்தலங்கானலில் வந்திருந்தபோது, சோழநாட்டு நெடுமுடிக்கிள்ளி அவளைக்கண்டு காதல்கொண்டான். அவர்கள் சிலகாலம் வாழ்ந்த