பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


பிறகு பீலிவளை நாகநாட்டிற்குச் சென்றுவிட்டாள். நாகநாட்டில் அவளுக்குப் பிறந்த குழந்தையை அவள் மணிபல்லவத் (சம்புகொலப்பட்டினம்) துறைமுகத்தில் வந்த கம்பளச்செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து, அச்சிறுவனைச் சோழனிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பினாள். ஆனால், வழியில் அந்தச் சிறுவன் கடலில்முழுகி இறந்துபோனான் (மணிமே. 24: 27-60; 25:178-196).

கஜபாகு 1

வங்கநாசிக திஸ்ஸனுக்கும் மகாமத்தாவுக்கும பிறந்த மகன் பேர்பெற்ற கஜபாகு அரசன். கஜபாகுவைக் கநுபாகு காமணி என்றும், கஜ்ஜபாகுக காமணி என்றும், கயவாகு என்றும் கூறுவர். சிலப்பதிகாரம் கயவாகு என்று கூறகிறது. கஜபாகு காமணி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.பி. 171-193) அரசாண்டான்.15 கஜபாகுவின் காலத்தில் சேர நாட்டையரசாண்ட சேரன் செங்குட்டுவன் பத்தினித் தேவிக்கு வஞ்சிமா நகரத்தில் பத்தினிக்கோட்டம் அமைத்துச் சிறப்புச்செய்தான். அந்த விழாவுக்கு வந்து சிறப்புச் செய்த மன்னர்களுள் கஜபாகுவும் ஒருவன். கஜநபாகு வேந்தன் இலங்கையில் பத்தினித் தெய்யோ (பத்தினித் தெய்வ) வழிபாட்டை உண்டாக்கினான். கஜபாகு வேந்தன் வஞ்சிமா நகரத்துக்கு வந்திருந்தபோது பத்தினித் தேவியைத் தன்னுடைய நாட்டிலும் வந்தருள வேண்டுமென்று வரங்கேட்டதும், அத்தெய்வம் வரந்தந்ததும், பிறகு அவன் பத்தினி வழிபாட்டை இலங்கையில் உண்டாக்கியதும் ஆகியவற்றைச் சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.

குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென்றெழுந்த தொருகுரல் (சிலப். 30: 159-164)

‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, பிறகு தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து விழாச் செய்ததைச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை இவ்வாறு கூறுகிறது: