508
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்குமதியாயின என்று அறிகிறோம். 'ஈழத்து உணவும் காழகத்துஆககமும்’ (பட்டினப். 191) என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்.
ஈழநாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த பொலாலையன் என்னும் தமிழருடைய பெயர் (கடைச்சங்க காலத்தவர்) ஒரு கல்வெட்டெழுத்தில் காணப்படுகிறது. பாண்டிநாட்டுத் திருப்பரங்குன்றத்து மலைக்குகையொன்றில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டு இதைக் கூறுகிறது.[1] இந்தத் தமிழ் வாணிகன் பெயரை ‘எருக்காட்டூர் ஈழக்குடும்பிகன் பொலாலையன்’ என்று கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. பாண்டிநாட்டில் எருக்காட்டூரில் இருந்தவரும் ஈழத்தில் சென்று வாணிகம் செய்தவருமான பொலாலையன் என்பது இதன் பொருள்.
ஈழநாடாகிய இலங்கையில் சங்ககாலத்திலே தமிழர்சென்று வாழ்ந்திருந்தனர் என்பதை அறிகிறோம். அவர்களில் ஒருவர் பெயர் பூதன்தேவனார் என்பது, ஈழத்தில் வாழ்ந்து வந்தபடியால் அவர் ஈழத்துப் பூதன்தேவனார் என்று கூறப்பட்டார். அவர் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர். அவருடைய செய்யுள்கள் சங்கத் தொகைநூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன (அகம்.231: 10-13).
அகநானூற்றுச் செய்யுளில் இவர்,
..........பொருவர்,
செல்சமங்கடந்த செல்லா நல்லிசை
விசும்புஇவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூடல்
என்று பசும்பூண் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். இந்தப் பசும்பூண் பாண்டியன் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு இருந்தான். ஆகவே, இவர் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) இருந்தவர் எனக் கூறலாம்.
- ↑ 19