பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
55
ஔவையார் கூறுகின்றார். இவனுடைய வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடிய செய்யுள் இப்போது கிடைக்கவில்லை. கோவலூர்ப் போரை இவன் வென்றோனேயல்லாமல் கோவலூரை இவன் பிடிக்கவில்லை.
அதிகமான் நெடுமான் அஞ்சி வேறு சில போர்களில் வெற்றிபெற்றான் என்று ஔவையார் கூறுகிறார். “கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சி” (புறம் 92: 5-6). இந்தப் போர்கள் யாருடன் எங்கு நடந்தன என்பதும் தெரியவில்லை.
உண்டவரை நெடுங்காலம் வாழச் செய்கிற கிடைத்ததற்கரிய கரு நெல்லிக்கனி அதிகமான் நெடுமான் அஞ்சிக்குக் கிடைத்தது. அக்கனியை அவன் தான் உண்ணாமல் பெரும் புலவராகிய ஔவையாருக்குக் கொடுத்தான். அவர் அதையுண்ட பிறகுதான் அது கிடைத்தற்கரிய கருநெல்லிக்கனி என்பது அவருக்குத் தெரிந்தது. அப்போது அவர் இவனை வியந்து பாடினார்.[1] இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையுங் கூறுகின்றது.
அதிகமான் அரசர் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கியதையும் ஔவைக்குக் கருநெல்லிக்கனி கொடுத்ததையும் பிற்காலத்து நூலாகிய கொங்குமண்டல சதகமுங் கூறுகின்றது.
“சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவதுங் கொங்கு மண்டலமே”
இவ்வதிகமான் ஔவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான் என்பது ஔவையார் பாடிய புறம் 95 ஆம் செய்யுளிலிருந்து தெரிகின்றது. இந்தத் தூது எதன் பொருட்டு அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை.
அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்போது போர்க்களத்தில் போர் செய்துகொண்டிருந்த அதிகமான் இந்தச் செய்தி அறிந்து போர்க்கோலத்தோடு விரைந்து வந்து தன் மகனைக் கண்டு மகிழ்ந்தான். அந்தக் காட்சியை ஔவையார் பாடியுள்ளார் (புறம் 100). அந்த மகனுடைய பெயர் பொகுட்டெழினி என்பது.
இவர்கள் காலத்தில் தென்கொங்கு நாட்டையரசாண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்தான்.
- ↑ 7