56
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
அவனை நெடுமான் அஞ்சியும் பொகுட்டெழினியும் எதிர்த்துப் போர் செய்தார்கள். பெருஞ்சேரலிரும்பொறை வெற்றி பெற்றுத் தகடூரைக் கைப்பற்றினான்.
நெடுங்காலம் சுதந்தரமாக அரசாண்டிருந்த அதிகமான் அரசர் தகடூர்ப் போருக்குப் பிறகு கொங்குச் சேரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். அதிகமான் அரசர் பரம்பரை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.
கடைச்சங்க காலத்தில் இருந்த அதிகமான் அரசர் பரம்பரையில் கீழ்க்கண்டவர் நமக்குத் தெரிகின்றனர்:
அதிகமான் நெடுமிடல் அஞ்சி
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிகமான் பொகுட்டெழினி
ஓரி
கொங்கு நாட்டைச் சேர்ந்த கொல்லி மலையையும் அதனைச் சார்ந்த கொல்லிக் கூற்றத்தையும் அரசாண்ட மன்னர் ஓரி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்களுடைய வரலாறு முழுவதும் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவன் ஆதனோரி. இவன் வள்ளலாக விளங்கினான். இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு யானையையும் தானங் கொடுத்தான்.[1] இவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாகக் கூறப்படுகின்றான். இவன் போருக்குப் போகும்போது தன்னுடைய ஓரி என்னும் பெயருள்ள குதிரைமேல் அமர்ந்து செல்வான். இவனும் இவனுடைய கொல்லி நாட்டுக்கு அடுத்திருந்த தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் நண்பர்களாக இருந்தார்கள்.
முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி, கொல்லிமலை ஓரியுடன் போர் செய்தான். காரி, தன்னுடைய காரி என்னும் குதிரை மேல் அமர்ந்தும் ஓரி தன்னுடைய ஓரி என்னுங் குதிரைமேல் அமர்ந்து போர் செய்தார்கள்.[2] போரில் ஓரி இறந்துபோக, காரி ஓரியின் ஊரில் வெற்றியோடு புகுந்தான்.[3] ஓரியின் கொல்லி நாட்டை வென்ற காரி அந்நாட்டைத் தன்னுடைய அரசனாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான்.[4] ஓரி அரசர், பரம்பரையாக ஆண்டு வந்த கொல்லி நாடு பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில், சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது.