பண்டைத் தமிழக வரலாறு:
கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1974ஆம் ஆண்டு வெளியிட்ட கொங்குநாட்டு வரலாறு – பழங்காலம் - கி.பி. 250வரை எனும் நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மகேந்திரவர்மன்(1955) வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957), மூன்றாம் நந்திவர்மன்(1958) ஆகிய நூல்களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்நூல்களில் காணப்படும் பல்லவ மன்னர்களின் வரலாறு இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலமாக வெளிவந்த தமிழ்நாடு - சங்ககாலம் - அரசியல் என்ற நூலில் இலங்கையில் தமிழர் என்ற ஒரு பகுதியை மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் எழுதியுள்ளார். அப்பகுதியும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொருண்மையோடு தொடர்புள்ள வேறுசில பத்திரிகைக் கட்டுரைகளும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
பண்டைத் தமிழ்ச்சமூகம் துளு நாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வரலாறுகள் உண்டு. இவற்றுள் கொங்கு நாடு என்பது பல்வேறு வளங்களைக் கொண்ட நிலப்பதியாகும். இப்பகுதி குறித்து தமிழில் பலரும் பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தின் வேறுபகுதிகளுக்கு மிகக் குறைந்த அளவில் வரலாறு எழுதப்பட்டிருந்தாலும், கொங்குநாடு தொடர்பாகவே விரிவாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கான காரணம் இப்பகுதி தொடர்பான விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில்