பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
59
சுதந்தரமாக அரசாண்டுகொண்டிருந்த விச்சியரசரை இளஞ்சேரல் இரும்பொறை வென்று விச்சி நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். விச்சியரசனுடைய ஐந்தெயில் கோட்டையை இளஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்ட போது விச்சியரசர்களுக்குப் பாண்டியனும் சோழனும் உதவியாக இருந்தார்கள். ஆனாலும், இளஞ்சேரல் இரும்பொறை விச்சியை வென்று அவனுடைய ஐந்தெயில் கோட்டையைக் கைப்பற்றினான்.[1]
கட்டியரசர்
கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆதிகாலம் முதல் அரசாண்டவர் கட்டி என்னும் பெயர் பெற்ற பரம்பரையரசர். கட்டியர் அரசாண்ட பகுதி வடகொங்கு நாட்டில், வடுக தேசமாகிய கன்னட தேசத்தின் தெற்கு எல்லையைச் சார்ந்திருந்தது.[2] வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் சோழனுடைய சேனைத் தலைவனான பழையன் படையெடுத்துச் சென்று போர்செய்தபோது புன்னாட்டு அரசனுக்கு உதவியாகப் பழையனை எதிர்த்துப் போர்செய்த கொங்கு நாட்டு அரசர்களில் கட்டியரசனும் ஒருவன்.[3] ஒரு கட்டியரசன், உறையூரையாண்ட தித்தன் வெளியன் என்னுஞ் சோழன்மேல் போருக்குச் சென்று உறையூர்க் கோட்டையை யடைந்தபோது, கோட்டைக்குள் தித்தன் வெளியனுடைய பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் கிணைப்பறை கொட்டப்பட்ட முழக்கத்தைக் கேட்டுப் போர் செய்யாமல் திரும்பிப் போய்விட்டான்.[4]
கட்டியரசர், கொங்கு நாட்டையாண்ட பொறைய அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்று தோன்றுகின்றனர். கட்டி பரம்பரையார் மிகமிகப் பிற்காலத்திலும், விசயநகர ஆட்சிக் காலத்திலும் இருந்தார்கள். இக்காலத்தில் அவர்கள் கெட்டி முதலியார் என்று பெயர் பெற்றிருந்தார்கள். கட்டி என்னும் பெயரே பிற்காலத்தில் கெட்டி என்று மருவியது.
குதிரைமலைக் கொற்றவர்
கொங்கு நாட்டில் குதிரைமலையும் அதனை அடுத்து முதிரம் என்னும் ஊரும் இருந்தன. பிட்டங்கொற்றன் என்பவன் இங்குச் சிற்றரசனாக இருந்தான். இவன் சேரனுடைய சேனாபதி என்றும்