பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


வள்ளல் என்றும்ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார். குதிரைமலைக் கொற்றன் ஈகைக் குணம் உடையவன் என்று கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் கூறுகிறார்.[1] இவன் வானவனுடைய (சேரனுடைய) மறவன் என்றும் போர் செய்வதில் வல்லவன் என்றும் கூறப்படுகிறான்.[2] வடம வண்ணக்கன் தாமோதரனார், பிட்டங்கொற்றனையும், அவனுடைய அரசனான கோதையையும் கூறுகிறார்.[3] மாவண் ஈகைக் கோதையும் பிட்டனுடைய இறைவனும் கோதை எனப்படுகிறான். கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம் 170 : 6– 8) இவனைப் பாடியுள்ளார்.

குதிரைமலை நாட்டை ஆண்ட எழினி என்பவன் ஒருவன் கூறப்படுகிறான். இவன் பிட்டங்கொற்றனுக்குப் பிறகு இருந்தவன் எனத் தோன்றுகிறான். (இந்த எழினி தகடூரையாண்ட அதிகமான் குலத்தில் இருந்த எழினியல்லன்.) குதிரைமலை எழினி வள்ளலாகவும் இருந்தான். “ஊராதேந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினி” என்று (புறம் 158:8.9) இவன் கூறப்படுகிறான்.

எழினிக்குப் பிறகு முதிரத்தையும் குதிரைமலையையும் அரசாண்டவன் குமணன் என்பவன். இவன் வள்ளல்களில் ஒருவன்.[4] குமணனைப் புகழ்ந்து பெருஞ்சித்திரனார் பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 160, 161, 162, 163).

குமணனுக்குத் தம்பியொருவன் இருந்தான். அவனுக்கு இளங்குமணன் என்று பெயர். இளங்குமணன், தமயனான குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாட்டைக் கைப்பற்றியரசாண்டான். குமணன் காட்டிலே இருந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டிலே கண்டு ஒரு செய்யுளைப் பாடினார். அதில் அவர் தம்முடைய வறுமைத் துன்பத்தைக் கூறினார் (புறம் 164). குமணன் செய்யுளைக் கேட்டு மனம் உருகித் தன்னிடம் அப்போது பொருள் இல்லையே என்று கலங்கி தன்னுடைய போர்வாளைப் புலவரிடம் கொடுத்துத் தன்னுடைய தலையை வெட்டிக்கொண்டுபோய் இளங்குமணனிடங் கொடுத்தால் அவன் பெரும்பொருள் கொடுப்பான் என்று கூறினார். புலவர் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, நேரே இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டிக் குமணன் வாள் கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

  1. 23
  2. 24
  3. 25
  4. 26