பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
61
முதிரைமலைக் குமணனும் குதிரைமலைக் குமணனு ம் வெவ்வேறு ஆட்கள் போலத் தோன்றினாலும் இருவரும் ஒருவரே. முதிரமலைக்குக் குதிரைமலை என்றும் பெயர்.
நள்ளி
கண்டிரம் என்னும் நாட்டையரசாண்ட மன்னர்கள் கண்டிரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் நள்ளி என்பவன் ஒருவன். இவனைக் கண்டிரக்கோ பெருநள்ளி என்பர். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவனைக் ‘கண்டிரக்கோபெருநள்ளி’ என்பர். தேர் (வண்டி)களையும் யானைகளையும் பரிசிலர்களுக்குக் கொடுத்துப் புகழ் படைத்திருந்தான். நள்ளி ஊரில் இல்லாதபோது இரவலர் அவனுடைய மாளிகைக்கு வந்தால் அவனுடைய பெண்டிர் அவர்களுக்கு யானைக் கன்றுகளைப் பரிசாக அளித்தார்கள் (புறம் 151:1-7). நள்ளியின் கொடைச் சிறப்பைச் சிறுபாணாற்றுப்படையும் (அடி 104- 107) கூறுகிறது. பெருஞ்சித்திரனாரும் இவனுடைய வள்ளன்மையைக் கூறுகிறார் (புறம் 158 : 13 -14).
வன்பரணர் என்னும் புலவர் நள்ளியின் தோட்டிமலைக் காடுகளின் வழியே பயணஞ் செய்தபோது பசியினால் சோர்ந்து ஒரு பலாமரத்தின் அடியில் உட்கார்ந்துவிட்டார். அருகில் ஊர் இல்லாத காடாகையால் உணவு கிடைக்கவில்லை. அப்போது நள்ளி அங்கு வந்து மான் ஒன்றை வேட்டையாடிக் கொண்டு வந்து அதன் இறைச்சியை நெருப்பிலிட்டுச் சமைத்துப் புலவருக்குக் கொடுத்து அவர் பசியை நீக்கினான். இச்செய்தியை அவர் தாம் பாடிய செய்யுளில் கூறுகிறார் (புறம் 150). நள்ளியின் பெயரினால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்தது. புகழூர்மலைக் குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனம் நள்ளியூரைக் கூறுகிறது (Epl - coll 296 of 1963-64).
புன்னாட்டரசர்
புன்னாடு வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்தது. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்த தாலமி என்பவர் (Ptolemy) புன்னாட்டைத் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். அவர் அதை பொவுன்னாட (Pounnata) என்று கூறுகிறார். புன்னாட்டில் உலகப் புகழ் பெற்ற நீலக்கல் சுரங்கம் இருந்ததையும் அந்த நீலக்கற்களை உரோம தேசத்தவர் மதித்து வாங்கிச் சென்றதையும் முன்னமே கூறினோம். புன்னாட்டு வழியாகக் காவிரி, கப்பிணி என்னும் இரண்டு ஆறுகள் பாய்ந்தன.