பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கப்பிணி ஆறு காவிரியின் ஒரு கிளை நதி. கப்பிணி ஆற்றங்கரையில் புன்னாட்டின் தலைநகரமான கட்டூர் இருந்தது (Mysore Archaeological Report for 1917, p. 40 -44). கட்டூரைப் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கிட்டிபுரம் என்றும் பெயர் வழங்கினார்கள். தலைநகரமான கட்டூரில் புன்னாட்டரசர் இருந்து அரசாண்டார்கள். இது பிற்காலத்தில் புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த புன்னாடு இப்போது மைசூர் இராச்சியத்தில் ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கிறது.

துளு நாட்டு அரசனான நன்னன் புன்னாட்டைக் கைப்பற்ற முயன்றான். அப்போது ஆய் எயினன் (வெளியன் வேண்மான் ஆய் எயினன்) புன்னாட்டு அரசனுக்கு உதவியாகத் துளு நாட்டரசனின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டரசனின் சேனாதிபதியான மிஞிலி, பாழி என்னும் போர்க்களத்தில் ஆய்எயினனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.[1] இந்த வெளியன் வேண்மான் ஆய்எயினன், சேர நாட்டரசனாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலினுடை சேனாதிபதி, துளு நாட்டு நன்னன் தான் கருதியது போல் புன்னாட்டைக் கைப்பற்ற முடியவில்லை.

புன்னாட்டரசர் கொங்குச் சேரர்களுக்குக் கீழ் அடங்கியிருந்தனர் என்று தெரிகின்றது. பெரும்பூண் சென்னி என்னுஞ் சோழன் புன்னாட்டைக் கைப்பற்ற எண்ணித் தன்னுடைய சேனாதிபதி பழையன் என்பவன் தலைமையில் தன்னுடைய சேனையையனுப்பினான். பழையன் புன்னாட்டுக் கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றான். புன்னாட்டரசனுக்கு உதவியாகக் கங்க அரசன், கட்டியரசன், அத்தி, புன்றுறை முதலியவர்கள் இருந்து பழையனுடன் போர் செய்தார்கள். அப்போரில் பழையன் இறந்து போனான்.[2]

புன்னாட்டரசர் சங்க காலத்துக்குப் பிறகும் கி.பி.5 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அரசாண்டனர். புன்னாட்டில் கிடைத்த ஒரு சாசன எழுத்து புன்னாட்டரசர் சிலருடைய பெயர்களைக் கூறுகின்றது (Indian Antiquary, xii 13, xvii 366). இதில் கீழ்க்கண்ட அரசரின் வழிமுறை கூறப்படுகிறது. ராஷ்ட்ரவர்மன், இவன் மகன் நாகதத்தன், இவன் மகன் புஜகன் (இவன் சிங்கவர்மன் மகளை மணஞ் செய்து கொண்டான்). இவனுடைய மகன் ஸ்கந்தவர்மன், இவனுடைய மகன் இரவிதத்தன் (Mysore and Coorg from its Inscriptions, B. Lewis Rice, 1909, p.146).

  1. 27
  2. 28