3. கொங்கு நாட்டில் சேரர் ஆட்சி
கொங்குவைச் சேரர் கைப்பற்றியது
பழங்கொங்கு நாட்டைச் சிற்றரசர்கள் அரசாண்டார்கள் என்றும் அக்காலத்தில் அந்நாட்டில் பேரரசர் இல்லை என்றும் அறிந்தோம். கொங்கு நாட்டின் சுற்றுப்புறங்களில் இருந்த சேர, சோழ, பாண்டியர் கொங்குச் சிற்றரசர்களை வென்று அந்நாட்டைத் தங்கள் தங்கள் இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ளக் கருதி அவர்கள் தனித்தனியாகப் படையெடுத்து வந்து கொங்கு நாட்டில் போர் செய்தார்கள். கொங்கு நாட்டரசர் தங்கள் நாட்டை எளிதில் விட்டுவிடவில்லை. படையெடுத்துப் போருக்கு வந்த அரசர்களோடு அவர்கள் கடுமையாகப் போர் செய்து எதிர்த்தார்கள். இவ்வாறு பல காலமாகக் கொங்குநாட்டில் போர்கள் நடந்தன. கடைசியாகச் சேர அரசர் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியில் சில ஊர்களைக் கைப்பற்றினார்கள். பாலைக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் வந்து சேர அரசர், யானைமலைக் காடுகளை முதலில் கைப்பற்றினார்கள். யானை மலைப் பிரதேசத்துக்கு அக்காலத்தில் உம்பல் காடு என்று பெயர் இருந்தது (உம்பல் - யானை). அங்குப் பல ஊர்கள் இருந்தன.
சேர மன்னர் கொங்கு நாட்டில் கால் ஊன்றுவதைக் கண்ட சோழ அரசரும் பாண்டிய மன்னரும் சும்மா இருக்கவில்லை. சேரருக்கு எதிராக அவர்கள் போர் செய்து சேரரின் ஆதிக்கத்தைத் தடுத்தார்கள் அவர்கள் கொங்குச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து, சேர அரசரின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். இதன் காரணமாகச் சேர மன்னர் கொங்கு நாட்டை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியோடு போர் செய்து கொங்கு நாட்டில் சிறிதுசிறிதாகச் சேர அரசர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள்.
சேர நாட்டு அரசனான உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். அவர்கள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் (பதிற்றுப் பத்து 2 ஆம் பத்தின் தலைவன்) பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் (பதிற்றுப்பத்து 3 ஆம் பத்துத் தலைவன்) ஆவர். இளையனாகிய