பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


குட்டுவன் பெரிய யானைப்படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று பெயர் பெற்றான். இவன் உம்பற் காட்டையும் (யானைமலைப் பிரதேசம்) அகப்பா என்னும் கோட்டையையும் வென்றான். உம்பற் காட்டை வென்ற இவன் அங்குத் தன் ஆட்சியை நிறுவினான். நிறுவித் தன்னுடைய உறவினரில் முதியவர்களுக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தான். இதை

“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியவரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து”


என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பதிகங் கூறுகின்றது. “முதியரை மதியுறழ் மரபிற் றழீஇ மண்வகுத்தீத்தெனக் கூட்டித் தன்குலத்தில் தனக்கு முதியரை மதியொடொத்த தன் தண்ணிளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன் நாட்டைப் பகுத்துக் கொடுத்து என உரைக்க” என்பது பழைய உரை.

உம்பற்காடு என்னும் நாட்டை அடக்கி அதனைத் தன்னுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது இவனுடைய முக்கியச் செயலாகும். இவனுடைய தமயனான நெடுஞ் சேரலாதன், தன்னைப் பாடிய (இரண்டாம் பத்து) குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறூர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்துப் பதிகக் குறிப்பு).

இதனால் உம்பற்காடு அக்காலத்தில் சேர அரசர்களுக்கு உரியதாயிற்று என்பது தெரிகின்றது.

✽ ✽ ✽