பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
73
அந்துவன் பொறையன், தன்னுடைய மகனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஆவிநாட்டுச் சிற்றரசனாகிய வேளாவிக் கோமான் மகளாகிய பதுமன்தேவி என்பவளைத் திருமணஞ் செய்வித்தான். அவனுடைய தாயாதித் தமயனாகிய உதியஞ்சேரலும் தன்னுடைய மகனாகிய (இமயவரம்பன்) நெடுஞ்சேரலாதனுக்கு மேற்படி வேளாவிக் கோமானின் இன்னொருமகளைத் திருமணஞ் செய்வித்திருந்தான். எனவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் மணஞ் செய்திருந்த மனைவியர் தமக்கை தங்கையர் என்பது தெரிகின்றது.
அந்துவன் பொறையனுக்கு அந்துவஞ்செள்ளை என்று ஒரு மகள் இருந்தாள் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஊகிக்கிறார்.[1] இவர் கூற்றுக்குச் சான்று இல்லை; வெறும் ஊகமாகக் கூறுகிறார்.
அந்துவஞ்சேரல் இரும்பொறை, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்து இறந்துபோனான் என்று திரு. கே.ஜி சேஷையர் கருதுகிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அந்துவஞ் சேரலும் ஒருவரே என்று அவர் கருதுகிறார்.[2] ஆனால், அந்துவஞ் சேரலும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்கு அவர் சான்று காட்டவில்லை. புறம் 62, 63 ஆம் செய்யுட்களின் அடிக்குறிப்புகள், “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது” என்று கூறுகின்றன. அந்துவஞ் சேரலும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்குச் சான்று இல்லை. சேஷையா ஊகம் சரியன்று என்று தோன்றுகிறது.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
சங்க காலத்தில் இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், சென்ற தலைமுறையில் சில ஆராய்ச்சிக்காரர்கள் ‘கருவூர் சேர நாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா’ என்பது பற்றி வாதங்கள் நிகழ்த்திக் கட்டுரைகள் எழுதினார்கள். சங்ககாலத்தில் சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வெவ்வேறு கருவூர்கள் இருந்ததை அவர்கள் அறியவில்லை.
2. (P. 36. Cera Kings of the Sangam period K.G. Sesha Aiyer. (1937).
3. (PP. 506, 507, A Comprehensive History of India, Edited by K.A. Nilakanta Sastri).
4. (P. 37, 51, Cera Kings of the Sangam Period).