பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. செல்வக் கடுங்கோ வாழியாதன்

மாந்தரன் 1

அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (செ. க. வா. ஆ.) சிக்கற்பள்ளி என்னும் ஊரில் இறந்தபடியால் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன் என்று இவன் பிற்காலத்தில் பெயர் பெற்றான். செல்வக்கோமான் (7ஆம் பத்து 7 : 23) என்று பெயர் பெற்ற இவன் போரில் மிக்க வலிமையுடையவனாக இருந்தது பற்றிக் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். “மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல், துப்புத்துறை போகிய கொற்றவேந்தே” என்று இவனைக் கபிலர் கூறுவது காண்க (7ஆம் பத்து2: 8–9). திறல் -ஆற்றல், வல்லமை.) ‘செல்வக் கோவே சேரலர் மருக’ என்று கபிலர் கூறுகிறார் (7ஆம் பத்து 3: 16) ஆதன் என்பது இவனுக்குரிய பெயர்.

செ. க. வா. ஆதனுக்கு மாந்தரன், மாந்தரஞ்சேரல் என்னும் பெயரும் இருந்தது. இவ்வரசன் காலத்தில் வாழ்ந்தவரும் சேர அரசர் பரம்பரையை நன்கறிந்தவருமான பரணர் இப்பெயரைத் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். அகநானூறு 142ஆம் செய்யுளில் இப்புலவர் இவ்வரசனை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்று கூறுகிறார். சிலப்பதிகாரக் காவியத்திலும் இவன் மாந்தரம் பொறையன் (கட்டுரை காதை, அடி 84) என்று கூறப்படுகிறான். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ‘மாந்தரன் மருகன்’ (மாந்தரனுடைய பரம்பரையில் வந்தவன்) என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார்.

போர்செய்வதில் திறலுடைய வீரன் இவன் என்றும் அதுபற்றியே இவன் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் என்றும் அறிகிறோம். ஆனால், இவன் செய்த போர்களின் விபரந் தெரியவில்லை. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியைச் சேர்ந்த பொறையர், கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாக வென்றனர். இவன் தந்தையாகிய அந்துவன் பொறையன் ‘மடியா உள்ளத்து மாற்றோர்ப் பிணித்தவன்’ என்று கூறப்படுகிறான். அவனைத் தொடர்ந்து கொங்கு இராச்சியத்தை விரிவுபடுத்திய இவ்வரசனும் கொங்கு நாட்டிலிருந்த பல