பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
75
சிற்றரசர்களுடன் போர்செய்து அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருக்கவேண்டும். இவ்வரசன் மேல் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் இவ்வரசனைப் போர்க்களத்திலே பாசறையில் சந்தித்தார். போர்க்களங்களிலே இவனுடைய உடம்பில் பல வெட்டுக் காயங்கள் பட்டிருந்தன என்றும் அந்த விழுப்புண் தழும்புகளை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான் என்றும் கபிலர் கூறுகிறார் (“எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து, சாந்தெழில் மறைந்த சான்றோர் பெருமகன்” -7ஆம் பத்து, 7: 17 18). ஆனால், எந்தெந்தப் போர்க்களத்தில் எந்தெந்த அரசனுடன் இவன் போர் செய்தான் என்பது தெரியவில்லை. சோழ, பாண்டியர் ஒன்று சேர்ந்து வந்து இவன் மீது போர்செய்தனர் என்றும் அவர்களை இவன் வென்று ஓட்டினான் என்றும் கபிலர் கூறுகிறார்.[1] சேர அரசர் கொங்குநாட்டுச் சிற்றரசருடன் நாடு பிடிக்கப் போர் செய்தபோதெல்லாம் சோழ பாண்டியர் கொங்கு நாட்டுச் சிற்றரசருடன் சேர்ந்து சேர அரசரை எதிர்த்தார்கள். அவ்வாறு சோழ, பாண்டியர் சேரரை எதிர்த்த ஒன்றைத்தான் இது கூறுகிறது. செ.க.வா. ஆதன் கொங்கு நாட்டுச் சிற்றரசர்களோடு போர்செய்து வென்று அவர்களுடைய ஊர்களைக் கைக்கொண்டான் என்பது தெரிகின்றது. இவனுடைய கொங்கு இராச்சியம் சிறிதாக இருந்ததைப் பெரியதாக்க வேண்டும் என்று இவன் கருதிப் போர் செய்து வென்று சில நாடுகளை இவன் தன் இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்பதைக் கபிலர் கூறுகிறார். சேரலாதனுக்குச் சூரியனை ஒப்புமை கூறுகிறவர் சேரலாதனுக்குச் சூரியன் இணையாக மாட்டான் என்று கூறுகிறார்.[2] பல அரசர்களை வென்று இவன் அவ்வெற்றிகளுக்கு அறிகுறியாக வேள்விகளைச் செய்தான்.
செ. க.வா. ஆதனின் கொங்கு இராச்சியம் கொங்குநாட்டின் தென் பகுதியில் மட்டும் இருந்தது. இவனுடைய இராச்சியத்தின் வடக்கிலிருந்த கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை இவன் வெல்லவில்லை. அவற்றை வென்று சேர்த்துக் கொண்டவன் இவனுடைய மகனான பெருஞ்சேரல் இரும் பொறையாவான்.
செல்வக் கடுங்கோ வாழி ஆதன், ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்த (இப்போதைய பழநிமலை வட்டாரம்) நாட்டின் சிற்றரசனாகிய வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனுடைய பெண்களில் ஒருத்தியைத் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தான். இவ்வரசியின் பெயர் வேள் ஆவிக்கோமான் பதுமன்தேவி என்பது (8ஆம் பத்து, பதிகம் அடி 1 -2). இந்த அரசியின்