பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

77


என்பதை இப்போது அறிந்து திருத்திக்கொண்டேன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் துணைப் புதல்வர் (இரண்டு பிள்ளைகள்) இருந்தனர் என்பது திட்டமாகத் தெரிகிறது.

செ.க. வா. ஆதன் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தைப் பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் அரசனாக இருந்த கொடை வள்ளல் என்று புகழ்பெற்ற பாரி மன்னனின் புலவராக இருந்த கபிலர், அம் மன்னன் இறந்தபிறகு கொங்கு நாட்டுக்கு வந்து செ.க.வா. ஆதனைப் பாசறையில் கண்டு அவன் மீது 7 ஆம் பத்துப் பாடினார்.

செ.க.வா. ஆதன் இருபத்தைந்துயாண்டு அரசாண்டான் என்று ஏழாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது.

இவ்வரசன் திருமாலை வழிபட்டான். அந்தத் திருமாலின் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங்கொடுத்தான் (“மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்கு, ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” 7ஆம் பத்துப் பதிகம் அடி 8-9). இவன் தன்னுடைய புரோகிதனைப் பார்க்கிலும் அறநெறி யறிந்தவனாக இருந்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.[1]

செ.க.வா. ஆதன் சில யாகங்களைச் (வேள்விகளைச்) செய்து பிராமணருக்குத் தானங்கொடுத்தான். இவன் வேள்வியில் பிராமணருக்குப் பொன்னை நீர்வார்த்துக் கொடுத்தபோது அந்நீர் பாய்ந்து தரையைச் சேறாக்கியது என்று கூறப்படுகிறது. இதனால் இவனுடைய தானம் மிகப் பெரிதாக இருந்தது என்பது தெரிகின்றது.[2]

புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து இவ்வரசன் போற்றினான். இசைவாணர்களையும் இவன் ஆதரித்தான். ‘பாணர் புரவல, பரிசிலர் வெருக்கை’ என்று இவன் புகழப்படுகிறான்(7ஆம் பத்து 5:11).

இவ்வரசனிடம் பரிசில் பெறச் சென்ற குண்டுகண் பாலியாதனார் என்னும் புலவருக்கு இவன் பெருஞ்செல்வம் வழங்கினான். யானை, குதிரை, ஆட்டுமந்தை, மாட்டுமந்தைகள், மனை, மனையைச் சார்ந்து வயல்கள், வயல்களில் வேலை செய்யக் களமர் (உழவர்) இவைகளை யெல்லாம் இவ்வரசன் இப்புலவருக்கு வழங்கினான். இவைகளையெல்லாங் கண்ட இந்தப் புலவர் இது கனவா நனவா என்று அறியாமல் திகைத்துப் போனதாக அவரே கூறுகிறார் (புறம். 387).

  1. 7
  2. 8