பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டையரசாண்டான். இவன், தன் இராச்சியத்தில் அடங்காமல் சுதந்தரமாக இருந்த கொங்கு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தன்னுடைய இராச்சியத் துடன் சேர்த்துக் கொண்டான். இவன் ‘கொடித் தேர்ப்பொறையன்’, ‘சினப்போர்ப் பொறையன்’, ‘பொலந்தேர் யானை இயல் தேர்ப் பொறையன்’ என்று கூறப்படுகிறான். இவன் ‘புண்ணுடை எறுழ்த் தோள்’ உடையவன். அதாவது, எப்பொழுதும் போர் செய்து அதனால் ஏற்பட்ட புண் ஆறாத வலிமையுடைய தோள்களையுடையவன். தகடூர் நாட்டை வென்றபடியால் இவன், ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். இவன் வென்ற போர்களில் மூன்று போர்கள் முக்கியமானவை. அவை காமூர்ப் போர், கொல்லிப் போர், தகடூர்ப் போர் என்பவை.

காமூர்ப் போர்

கொங்கு நாட்டில் காமூர் என்னும் ஊர் இருந்தது. அதன் அரசன் கழுவுள் என்பவன். முல்லை நிலமாகிய காமூரில் இடையர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களின் தலைவனாகிய கழுவுள், பெருஞ்சேரலிரும்பொறைக்கு அடங்காமல் சுதந்தரமாக அரசாண்டான். பெருஞ்சேரல் இரும்பொறை காமூரை வெல்ல எண்ணிக் காமூரின் மேல் போருக்குச் சென்றான். காமூர் பலமான கோட்டையுடையதாக ஆழமான அகழியையும் பலமான மதிற்சுவர்களையுங் கொண்டிருந்தது. பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுளுடன் போர்செய்து காமூரை வென்றான். கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலுக்கு அடங்கினான்.[1]

காமூர்அரசனாகிய கழுவுள் எளிதில் பணியவில்லை. பெருஞ்சேரல் இரும்பொறைக்குச் சார்பாகப் பதினான்கு வேள் அரசர் போர் செய்து காமூரை வென்றனர். இந்த விபரத்தைப் பரணர் கூறுகிறார்.[2] அந்தப் பதிநான்கு வேளிரின் பெயர்கள் தெரியவில்லை.

  1. 1
  2. 2