பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2




கொல்லிப் போர்

பெருஞ்சேரலிரும்பொறை செய்து வென்ற இன்னொரு பெரிய போர் கொல்லிப் போர். கொல்லி மலைகளும் கொல்லி நாடும் கொல்லிக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்தன. அதை ஓரி என்னும் அரசன் சுதந்தரமாக அரசாண்டு வந்தான். ஓரி, புலவர்களை ஆதரித்த வள்ளல். பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியுடன் போர் செய்து வென்று அந்த நாட்டைத் தன்னுடைய இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டான், இந்தப் போரின் விபரத்தைச் சங்கப் புலவர்களின் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம்.

பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின் கொல்லி நாட்டின் மேல் நேரே படையெடுத்துச் செல்லவில்லை. அவன், மலையமான் திருமுடிக்காரியைக் கொண்டு ஓரியை வென்று கொல்லி நாட்டைத் தன் இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். கோவலூர் மன்னர்களான மலையமான் அரச பரம்பரையினர் சேர, சோழ, பாண்டியர்களில் யாரேனும் விரும்பினால், அவர்களுக்குச் சேனாதிபதியாக இருந்து போர் செய்வது வழக்கம். மலையமான் திருமுடிக்காரி, பெருஞ்சேரல் இரும்பொறைக்காக ஓரியுடன் போர் செய்து அவனைப் போரில் கொன்று கொல்லி நாட்டைப் (கொல்லிக் கூற்றத்தை) பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். கபிலர், பரணர் முதலான புலவர்கள் இச்செய்தியைக் கூறுகின்றனர்.

ஓரியின் குதிரைக்கு ஓரி என்றும், காரியின் (மலையமான் திருமுடிக்காரியின்) குதிரைக்கு காரி என்றும் பெயர். இவ்விருவரும் தத்தம் குதிரை மேல் அமர்ந்து போர் செய்தனர் என்று இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார் (“காரிக் குதிரை காரியொடு மலைந்த, ஓரிக்குதிரை ஓரியும்” - சிறுபாண். 110- 111). இந்தப் போரில் ஓரி இறந்து போனான். வெற்றி பெற்ற காரி, ஓரியின் ஊரில் புகுந்தான்.[1] கல்லாடனார் இதை இன்னும் தெளிவாக விளக்கிக் கூறுகிறார். முள்ளூர் மன்னனாகிய காரி ஓரியைப் போரில் கொன்று கொல்லி நாட்டை வென்று அதைச் சேரலனுக்குக் கொடுத்தான் என்று கூறுகிறார்.4 இங்குச் சேரலன் என்பவன் பெருஞ்சேரல் இரும்பொறையாவான்.

இப்போர் பரணரின் காலத்தில் நடந்தது. சேரன் செங்குட்டுவனை 5ஆம் பத்தில் பாடிய பரணர் இப்போர் நடந்த காலத்தில் இருந்தவர். அவர் ஓரியின் கொல்லியைப் பாடினார்.5 அது பொறையனுக்கு

  1. 3