பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

87


கண்ட அரசன், அரண்மனைச் சேவகர் இதனைக் கண்டால் புலவருக்குத் துன்பஞ் செய்வார்கள் என்று கருதி, அவ்வாறு நேரிடாதபடி தான் அவர் அருகில் நின்று கவரியினால் வீசிக்கொண்டிருந்தான். விழித்துக் கொண்ட புலவர், நடந்ததையறிந்து தம்முடைய செயலுக்குப் பெரிதும் வருந்தினார். அரசனுடைய பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடினார் (புறம் 50). அச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறை முரசுக்கட்டில் அறியாதேறிய மோசிகீரனாரைத் தவறு செய்யாது அவன் துயிலெழுந் துணையும் கவரி கொண்டு வீசியானைப் பாடியது” என்று கூறுகிறது.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. “குண்டுகண் அழிய குறுந்தண் ஞாயில், ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு, கன்றுடை யாயந்தரீ இப் புகல்சிறந்து, புலவுவில் இளையர் அங்கை விடுப்ப, மத்துக் கயிறாடா வைகற் பொழுது நினையூஉ, ஆன்பயன் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப், பதிபாழாக.” (8ஆம் பத்து 1: 12-18)

2. “வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை, ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த, கழுவுள் காழூர்.” (அகம். 135: 11-13).

3. “பழவிறல், ஓரிக்கொன்ற ஒரு பெருந் தெருவில், காரி புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால் ஊரே.” (நற். 330:4-7).

4. “முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரீக்கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி”. (அகம். 209: 12-15).

5. ‘ஓரி, பல்பழம் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகம். 208: 21-22) என்றும், ‘கைவண் ஓரிகானம்’ (புறம். 199: 3) என்றும், ‘வல்வில் ஓரி கானம்’ (நற். 6:9) என்றும், ‘மாரி வண்மகிழ் ஓரி கொல்லி’ (நற். 265:7) என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஓரியின் கொல்லியைக் கூறின பரணர் இன்னொரு செய்யுளில் ‘வெள்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி’ (அகம். 62: 12-13) என்று கூறுகிறார். அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால் பரணர் காலத்திலே ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.