பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கடுங்கோவுக்கு அந்துவஞ்செள்ளை என்னும் ஒரு சகோதரி இருந்தாள் என்று நீலகண்ட சாஸ்திரி ஊகமாக எழுதியுள்ளார். இதற்குச் சான்று ஒன்றும் இவர் காட்டவில்லை. இவ்வாறு கற்பனையாகக் கற்பிக்கிற இவர் அந்துவஞ்செள்ளையை யாரோ ஒரு குட்டுவன் இரும்பொறை என்னும் சேர அரசன் மணஞ் செய்துகொண்டான் என்று மேலும் கற்பனை செய்கிறார். குட்டுவன் இரும்பொறை, செல்வக் கடுங்கோவின் இளைய மகன் என்பதற்கு மேலே சான்று காட்டியுள்ளோம். இந்த அகச் சான்றையறியாமல், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்ட நீலகண்ட சாஸ்திரி, அந்துவஞ்செள்ளை மையூர்கிழானின் மகள் என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறபடியால், தான் தவறாக யூகித்துக் கொண்ட தவற்றைச் சரிபடுத்துவதற்காக, மையூர்கிழான் என்பது அந்துவன் பொறையனுடைய இன்னொரு பெயர் என்று இன்னொரு தவற்றைச் செய்துள்ளார். இதுவும் இவருடைய கற்பனையே. பொறையனாகிய சேர அரசன் எப்படி கிழானாக இருக்க முடியும்? நீலகண்ட சாஸ்திரி இவ்வாறெல்லாம் தன் மனம் போனபடி கற்பனைகளைச் செய்துள்ளார்.[1]

அந்துவன், அந்துவஞ்செள்ளை என்பதில் ‘அந்துவன்’ என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஊகஞ் செய்கிறார். இதற்குக் காரணம் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள் என்பதை இவர் அறியாததுதான்.

பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதையறிந்தோம். குட்டுவன் இரும்பொறை அந்துவஞ்செள்ளையை (மையூர் கிழான் மகளை) மணஞ் செய்து இருந்ததையும் இவர்களுக்கு இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மகன் இருந்ததையும் (9ஆம் பத்துப் பதிகம்) அறிந்தோம். பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர்ப் போரைச் செய்த காலத்தில் அவன் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறை உயிர் வாழ்ந்திருந்தான். இதைத் தகடூர் யாத்திரைச் செய்யுள்களினால் குறிப்பாக அறிகிறோம்.

“சால வெகுளிப் பொறையகேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறி”
(புறத்திரட்டு 776, தகடூர் யாத்திரை)

  1. 1