பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


இச்செய்யுளில் நீ என்பது குட்டுவன் இரும்பொறையையும் ‘நும்முன்’ என்பது இவன் தமையனான பெருஞ்சேரல் இரும்பொறையையும் குறிக்கின்றன. குட்டுவன் இரும்பொறையின் வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. தகடூர்ப் போர் நடந்தபோது இருந்த இவன், அப்போரிலோ அல்லது வேறு போரிலோ இறந்திருக்க வேண்டும். இவனைப் பற்றிய செய்யுள் ஒன்றும் தொகை நூல்களில் காணப்படவில்லை. இவனுடைய மகன் இளஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் தலைவன் என்பதை யறிந்தோம்.

கொங்கு நாட்டை அரசாண்ட இவர்கள் காலத்தில் (பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை) சேர நாட்டை அரசாண்டவன் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் பெயர் உண்டு. பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை வென்ற பிறகு நீண்ட காலம் அரசாளவில்லை. அவன் ஏதோ ஒரு போரில் இறந்துபோனான் எனத் தோன்றுகிறது. அவன் அரசாண்ட காலம் 17 ஆண்டுகள் அவனுக்கு முன்னமே அவன் தம்பியான குட்டுவன் இரும்பொறை இறந்து போனான். பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு அரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறையும் 16 ஆண்டுதான் அரசாண்டான். இவர்கள் இருவருடைய ஆட்சிக்காலம் 33 ஆண்டுகளேயாகும். சேரன் செங்குட்டுவனோ 55 ஆண்டு அரசாண்டான் என்று 5ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவ்விரு கொங்கு நாட்டரசரும் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இறந்து போனார்கள். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா எடுப்பதற்கு முன்னமே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். அதனை இந்நூலில் இன்னொரு இடத்தில் (இரும்பொறையரசர்களின் கால நிர்ணயம்) காண்க.

பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு, அவனுடைய தம்பி குட்டுவன் இரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான். குட்டுவன் இரும்பொறை, பெருஞ்சேரலிரும்பொறைக்கு முன்னமே இறந்து போனதை அறிந்தோம். பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் சிறுவனாக இருந்தபடியால், அப்போது வயதுவந்தவனாக இருந்த இளஞ்சேரலிரும்பொறை அரசனானான்.