8. இளஞ்சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு இராச்சியத்தை அரசாண்டவன் அவனுடைய தம்பியின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்று கூறினோம். இவன் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவன்.
இளஞ்சேரல் இரும்பொறையைக் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்றும் சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையென்றும் கூறுவர். இவன் கொங்கு நாட்டின் அரசன் என்றும் பூழி நாடு, மாந்தை நகரம், கட்டூர், தொண்டி, இவைகளின் தலைவன் என்றுங் கூறப்படுகிறான்.[1]
கட்டூர் என்பதற்குப் பொதுவாகப் பாசறை என்பது பொருள். ஆனால், இங்குக் கூறப்பட்ட கட்டூர் என்பது புன்னாட்டின் தலை நகரமான கட்டூர், பிற்காலத்துச் சாசனங்களில் இவ்வூர் கிட்டூர் என்றும் கூறப்படுகிறது. புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் இப்போது மைசூருக்குத் தெற்கேயுள்ள ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கின்றன. சங்க காலத்தில் இவை வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. காவிரியாற்றின் ஓர் உபநதியாகிய கபிணி அல்லது கப்பிணி என்னும் ஆற்றங்கரை மேல் கட்டூர் இருந்தது. இவ்வூர் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கித்திப்புரம், கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது.
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில் வானியாறும் ஒன்று. “சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன்” (9ஆம் பத்து 6: 12- 13) என்று இவன் புகழப்படுகிறான். இவன் ஆட்சிக் காலத்தில் கொங்குநாடு முழுவதும் இவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தது.
இவனுடைய பெரிய தந்தையான பெருஞ்சேரலிரும்பொறை கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை வென்று கொங்கு ராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டதை முன்னமே அறிந்தோம். இவனுடைய தந்தையாகிய குட்டுவனிரும்பொறை தகடூர்ப் போரிலோ அல்லது அதற்கு அண்மையில் நடந்த வேறு ஒரு போரிலோ இறந்து
- ↑ 1