பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
95
போனான் என்று அறிந்தோம். ஆகவே இவன் கொங்கு நாட்டின் வடபகுதிகளை வென்று தன்னுடைய கொங்கு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
விச்சிப் போர்
இளஞ்சேரல் இரும்பொறை விச்சியூரை வென்றான். விச்சியூர் கொங்கு நாட்டிலிருந்தது. விச்சியூரிலிருந்த விச்சிமலைக்கு இப்போது பச்சைமலை என்று பெயர் வழங்குகிறது. இங்கு விச்சியூர் என்று ஓர் ஊர் உண்டு. அதன் அரசன் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான். விச்சியூர், மலை சார்ந்த நாடு (புறம். 200 : 1-8). விச்சிக்கோ, விச்சியர் பெருமகன் என்றுங் கூறப்படுகிறான் (குறுந். 328 :5). விச்சியூர் மலைமேல் விச்சிக்கோவுக்கு ஐந்தெயில் என்னும் பெயருள்ள கோட்டையிருந்தது.[1] இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் அந்த விச்சிக்கோவின் மகனான இன்னொரு விச்சிக்கோ விச்சி நாட்டையரசாண்டான். இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய ஆட்சிக்கு அடங்காமலிருந்த விச்சிக்கோவின் மேல் படையெடுத்துச் சென்று போர் செய்தான். விச்சிக்கோவுக்குச் சோழனும் பாண்டியனும் தங்கள் சேனைகளை உதவினார்கள். ஆனாலும், விச்சிக்கோ போரில் தோற்றான். அவனுடைய ஐந்தெயில் கோட்டையும் இளஞ்சேரலிரும் பொறைக்குரியதாயிற்று. “இருபெரு வேந்தரும் விச்சியும்வீழ, வருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து” (9 ஆம் பத்து, பதிகம்).
சோழனுடன் போர்
சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை யனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாபதி பழையன் எதிர்த்தான். இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை எதிரிட்டுப் போர் செய்தார்கள். பழையன் இவர்களை யெல்லாம் எதிர்த்துத் தனிநின்று கடும் போர்செய்தான். ஆனால், பலருடைய எதிர்ப்புக்குத் தாங்காமல் போர்க்களத்தில் இறந்து போனான்.
- ↑ 1