96
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
தன்னுடைய சேனைத் தலைவனான பழையன் கட்டூர்ப் போரில் மாண்டு போனதையும் தன் சேனை தோற்றுப் போனதையும் அறிந்த சோழன் பெரும்பூண் சென்னி மிக்க சினங்கொண்டான். அவன் தன்னுடைய சேனையுடன் புறப்பட்டுக் கொங்குநாட்டிலிருந்த இளஞ்சேரலிரும் பொறைக்கு உரியதான கழுமலம் என்னும் ஊரின் மேல் சென்று போர் செய்தான். அவ்வூரின் தலைவனான கணயன், சோழனை எதிர்த்துப் போரிட்டான். சோழன் போரில் வெற்றிகொண்டு கழுமலத்தைக் கைப்பற்றினதோடு கணயனையும் சிறைப்பிடித்தான். இந்தப் போர்ச் செய்திகளையெல்லாம் குடவாயிற் கீரத்தனார் கூறுகிறார்.[1]
சோழன் பெரும்பூண் சென்னியைச் சோழன் செங்கணான் என்று தவறாகக் கருதுகிறார் சேஷ ஐயர்.[2] இது தவறு.
இளஞ்சேரல் இரும்பொறையின் கீழ் கழுமலத்தில் சிற்றரசனாக இருந்த கணையனைக் கணைக்காலிரும் பொறை என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவறாகக் கருதுகிறார்.[3]
கணையன் வேறு கணைக்காலிரும்பொறை வேறு.
சோழன் பெரும்பூண் சென்னியும் சோழன் செங்கணானும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறையும் கணைக்காலிரும்பொறையும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறைக்குப் பின் ஒரு தலைமுறைக்குப் பிறகு இருந்தவன் கணைக்காலிரும்பொறை. கழுமலத்தில் இரண்டு போர்கள் நடந்திருக்கின்றன. முதற்போர், சோழன் பெரும்பூண் சென்னிக்கும் இளஞ்சேரல் இரும்பொறையின் கீழடங்கின கணையனுக்கும் நடந்தது. அதன்பிறகு இரண்டாவது போர் சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் நடந்தது.
சோழன் பெரும்பூண் சென்னி கொங்கு நாட்டின் மேல் படையெடுத்துவந்து போர் செய்து கழுமலத்தைக் கைப்பற்றியதையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை சினங்கொண்டு, அந்தச் சென்னியைப் பிடித்து வந்து தன் முன்னே நிறுத்தும்படித் தன்னுடைய சேனைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் போய்ப் பெரும்பூண் சென்னியோடு போர் செய்தார்கள். அந்தப்போர் பெரும்பூண் சென்னி கைப்பற்றியிருந்த கழுமலம் என்னும் ஊரில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் போரிலே சோழனுடைய படை வீரர்கள்