பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

97


தோற்றுத் தங்களுடைய (வேல்களை) ஈட்டிகளைப் போர்க்களத்திலே விட்டுவிட்டு ஓடினார்கள் அவர்கள் போர்க்களத்தில் போட்டு விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதன் (இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டன்) தன்னை ஏழாம் பத்தில் பாடின கபிலருக்குப் பரிசாகக் கொடுத்த ஊர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது.[1]

இதிலிருந்து சோழன் தோற்றுப் போன செய்தி தெரிகிறது. சோழன் பெரும்பூண் சென்னியுடன் போர்செய்து வென்றபிறகு இளஞ்சேரல் இரும்பொறை இன்னொரு சோழனுடன் போர்செய்தான்.

இளஞ்சேரலிரும்பொறை பெருஞ்சோழன் என்பவனையும் இளம்பழையன் மாறன் என்பவனையும் வென்றான்.[2] இந்தப் பெருஞ்சோழன் என்பவன் வேறு. மேலே சொன்ன பெரும்பூண் சென்னி வேறு என்று தோன்றுகிறது. இளம்பழையன் மாறன் என்பவன், கட்டூர்ப் போரில் முன்பு இறந்து போன பழையன் என்னும் சேனாதிபதியின் தம்பியாக இருக்கலாம். (இந்தப் பழையன் மாறனுக்கும் பாண்டி நாட்டில் மோகூரில் இருந்த பழையன் மாறனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவன் வேறு, அவன் வேறு)

இளஞ்சேரல் இரும்பொறை சோழ நாட்டில் சென்று சோழனுடன் போர் செய்து வென்றான் என்றும் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் காவல் தெய்வங்களாக இருந்த சதுக்கப்பூதம் என்னுந் தெய்வங்களைக் கொண்டு வந்து தன்னுடைய வஞ்சிக் கருவூரில் அமைத்து விழாச் செய்தான் என்றும் அறிகிறோம்.[3] காவிரிப்பூம் பட்டினத்துச் சதுக்கப் பூதரை எடுத்துக்கொண்டு வந்து இவன் வஞ்சி நகரத்தில் வைத்து விழா கொண்டாடினதைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.[4]

இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டனாக இருந்தவன் மையூர் கிழான். மையூர் கிழான் இவனுடைய தாய்ப்பாட்டன். மையூர்கிழானின் மகளான அந்துவஞ்செள்ளை இவனுடைய தாயார். இவனுடைய அமைச்சனாக இருந்த மையூர் கிழான் இவனுடைய தாய் மாமனாக இருக்க வேண்டும். அதாவது, இவனுடைய தாயாருடன் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அமைச்சனை இவன் புரோசு மயக்கினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகிறது.

  1. 5
  2. 6
  3. 7
  4. 8