பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

103

கூறுவார்கள். நான் காண்பது கனவு தான். ஆனால் பொய்க் கனவல்ல. கனவாக இருந்தால், நனவு போல நாள்தோறும் அம்மங்கை ஏன் தோன்றவேண்டும்? இது வெறும் பொய்த்தோற்றம் அல்ல. இக் கனவுக் காட்சி நாள்தோறும் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டே போகிறது. முந்திய நாள் இரவில், அவள் முகத்திலே புன்முறுவல் காணப்பட வில்லை. ஆர்வத்தோடு கண் இமைக்காமல் பார்த்தாள். நேற்று இரவு என் மனத்தை முழுவதும் கவர்ந்துகொண்டாள். வெண்மையான நெற்றியில் கரிய கூந்தல் சிறிது புரள, புருவத்தை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த கண்களால் அன்புடன் அவள் என்னை நோக்கியபோது, நானும் அவளை நோக்கினேனாக, வெட்கத்தினால் அவளுடைய கன்னம் செவ்வானம் போலச் சிவக்கச் சந்திரமண்டலம் போன்ற முகத்தைக் கவிழ்த்து, குமுதம் போன்ற செவ்வாயில் புன் முறுவல் அரும்பிய இனிய காட்சி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தன் அழகினால், தேவ கன்னியரையும் ஆண்மக்கள் என்று கருதும் படிச் செய்கிற கட்டழகு வாய்ந்த இப்பெண்ணரசி யார்? எங்குள்ளவள்? அறிய முடிய வில்லையே! மறக்கவும் முடிய வில்லையே! ... மறக்கத்தான் வேண்டும். ஆனால், மறப்பது எப்படி? போர் முதலிய ஏதேனும் ஏற்படுமானல் அந்த அலுவலில் மனத்தைச் செலுத்தி ஒருவாறு மறக்கலாம் ...

وو

இவ்வாறு புருடோத்தமன் தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு சேவகன் வந்து வணங்கி, “பெருமானடிகளே ! பாண்டி நாட்டிலிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான்” என்று கூறினான். “யார் அவன்?” என்று கேட்க, “அவன் பெயர் பலதேவன்" என்று கூறினான் என்றான் சேவகன். அரசன் அவனை உள்ளே வரும்படி கட்டளையிட, தூதன்வந்து அரசனைப் பணிந்து கூறுகிறான்: "சேர நாட்டு மன்னருக்கு மங்கலம் உண்டாகுக. தன்னுடைய (பாண்டியனுடைய) புகழைப் பூமிதேவி சுமக்க, பூமிபாரத்தை (அரசாட்சியை)த் தன் (பாண்டியன்) தோளிலே தாங்கிக்கொண்டு, பகையரசர்களின் தலைகளைப் போர்க் களத்திலே உருட்டி, ஆணைச்சக்கரத்தை நாடெங்கும் உருட்டி, கலகஞ் செய்யும் நாட்டுக் குறும்பர்கள் (பாண்டியனுடைய) முற்றத்திலே தமது கைகளையே தலையணையாகக் கொண்டு உறங்குவதற்கு முற்றத்தில் இடம் பார்க்க, திருநெல்வேலியில் வீற்றிருந் தரசாளும் ஜீவக மன்னன் அனுப்பிய தூதன் நான். பாண்டிய மன்னனின் முதன்மந்திரியாகிய, சூழ்ச்சியிலும் இராஜதந்திரத்திலும் வல்ல குடிலேந்திரரின் மகனாகிய என் பெயர் ...