பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஓடிச் சுனைகளில் இழிந்து, நிலத்தின் உட்புறங் களில் நுழைந்து ஓடி, ஊற்றாகப் பாய்ந்து ஆறாக ஓடி மடுவாய்க் கிடந்து மதகில் குதித்து வாய்க்காலில் ஓடிப் பலவாறு பாடுபட்டுச் சேர்த்துக் கொண்டு வந்த கல்லும் மண்ணும் சிறிதேயாயினும் அவற்றையும் ஏற்றுக்கொள்க. இன்னும் போய்க்கொண்டு வருவேன்' என்று கூறி மீண்டும் மேகமாகி மழை யாகப் பெய்து இரவும் பகலும் ஓயாமல் உழைக்கும் உழைப்பாளிகள் யார் உளர்?” இவ்வாறு கூறிக்கொண்டே நடராஜன் வாய்க்காலின் நீரைக் கையினால் தடுக்கிறான். அது வழிந்து ஓடுகிறது. “ஐயோ ! உனக்கு நோகிறதோ ! அழாதே, போ" என்று சொல்லி விடுகிறான். “தண்ணீரே, உன்னைப்போல் உலகத்தில் உழைப்பவர் யாவர் ? நீங்காத அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப் போலவே எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் !” என்று கூறுகிறான்.

பிறகு, மண்ணில் காணப்பட்ட நாங்கூழ்ப் புழுவை (நாகப் பூச்சியை)க் கண்டு அதற்கும் குறிக்கோள் உண்டு என்பதைக் கூறுகின்றன. "நாங்கூழ்ப் புழுவே, உன்னுடைய உழைப்பு ஓயாத உழைப்பு. எல்லா உழைப்பிலும் உழவர் உழைப்பே மேலானது, உழவருக்குப் பேருதவி செய்கிறவன் நீ. மண்ணைப் பக்குவப்படுத்துவதற்காகவே நீ பிறந்தாய். மண்ணைத் தின்று அதை மெழுகுபோலாக்கிப் பதப்படுத்தி உருட்டி உருட்டி உமிழ்கிறாய். புகழை விரும்பாமல் உழைப்பவரைப்போல நீ மண்ணில் மறைந்து வாழ்கிறாய். நீ மண்ணைப் பக்குவப்படுத்தா விட்டால், இந்தப் பயிர்கள் எப்படி விளையும் ? நீ செய்யும் இப் பேருதவியை எண்ணாமல் எறும்பு முதலிய பூச்சிகள் உன்னைக் கடித்துக் குறும்பு செய்கின்றன. உனக்குள்ள பொறுமையும் உழைப்பும் வேறு யாருக்கு உண்டு?" என்று கூறுகின்றான். அது மண்ணுள் மறைவதைக் கண்டு, “நீ புகழை விரும்பவில்லை. நல்லது போ. உன் வேலையைச் செய். இப்படி இன்பத்தையும் அன்பையும் காணாமலும் இவைகளைப் போற்றாமலும் இருக்கிற மனிதரின் வாழ்நாள் என்னே ! உடம்பையும் மனத்தையும் பெற்றுள்ள மனிதர்கள், சூரியனின் கதிர்களை இழுத்து ஒருமுகப்படுத்தித் தீயையுண்டாக்குகிற சிற்றாடியை (லென்ஸ் என்னும் கண்ணாடியை)ப் போல, அறிவை ஒருமுகப் படுத்திக் காணாத மக்கள், கள்ளர்... அவனை (பலதேவனை) நினைக்காதே. சினத்தீ எழும்புகிறது ! கருமி! அற்பன்! விடுவிடு!” என்று இவ்வாறு அவன் தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, தூசிப் படலம் புகை போல வானத்தில் காணப்பட்டதைக் கண்டான்.