பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

27

நாடகங்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. தெருக்கூத்துக்கள் ஏற்பட்டது, நாடகக்கலையின் வீழ்ச்சிக்கு அடையாளமாகும்.

கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் ஆங்கிலேயக் கல்வியும் நமது நாட்டில் ஏற்பட்ட பிறகு, மேல் நாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி நாடகங்கள் நடிக்கப்பட்டன. அதனால், தெருக்கூத்துக்கள் சிறிது சிறிதாக மறைந்து நாடகக்கலை உயர்வு பெற்றது. மேல்நாட்டு நாடகங்கள் நமது நாடகங்கள் நமது நாடகக்கலையைப் பலவிதத்தில் வளர்க்க உதவிபுரிந்துள்ளன. இதுவே தமிழ்நாட்டு நாடகக்கலை வரலாற்றின் சுருக்கம்.

தமிழர் பண்டைக்காலம் முதல் நாடகக்கலையை வளர்த்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் பொதுமக்கள் படிப்பதற்காக நாடக நூல்களை எழுதவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. மனோன்மணீயம் முதல் நாடகநூல்

-

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், தமிழில் நாடக இலக்கிய நூல்கள் இல்லாத குறையை உணர்ந்தார். வளமான இலக்கியங்கள் வெவ்வேறு துறைகளில் தமிழில் இருக்கவும், வடமொழி ஆங்கில மொழிகளில் உள்ளது போன்று நல்ல நாடக நூல்கள் தமிழில் இல்லாத குறையை அவர் உணர்ந்தார். இக் குறைபாட்டைத் தீர்க்கவே மனோன்மணீய நாடகத்தை இயற்றினார். இந்த நாடக நூலைப் படிப்பதற்காகவே எழுதியதாக அவரே தமது முன்னுரையில் எழுதியுள்ளார். படிப்பதற்காக எழுதப் பட்ட நாடக நூலாகையினாலே, ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில நாடக நூலாசிரியர் எளிய பாக்களினால் (Blank Verse) நமது நாடக நூல்களை இயற்றியதுபோலவே, இவரும் எளிய செய்யுள் நடையாகிய ஆசிரியப் பாவினால் இந் நூலை இயற்றினார். மனோன்மணீயம் சிறந்த நாடக நூலாகப் போற்றப்படும் காரணங்களில் ஒன்று, இது செய்யுள் நடையில் அமைந்துள்ளதாகும். மனோன்மணீய நாடகத்தின் கதையை இங்குக் கூற வேண்டுவதில்லை. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் தாமே எழுதியுள்ள கதையின் வசனம் இதனுடன் சேர்த்திருப்பதனாலும், ஒவ்வொரு அங்கத்துக்கும் கதை விளக்கம் எழுதியிருப்பதனாலும் இங்குக் கதையை விளக்கவேண்டுவது இல்லை. ஆகவே அதனை விடுத்து, இந்நூலின் அமைப்பைப்பற்றியும் நடையைப் பற்றியும் சில கூறுவோம்.