பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/105

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

105


இதனால், இந்த நூல் களப்பிர அரசன் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இந்த நூலின் வரலாற்றை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில் காண்க.

பெருங்கதை

பெருங்கதை என்னும் இந்த நூலுக்கு மாக்கதை என்றும் உதயணன் கதை என்றும் சுருக்கமாகக் கதை என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்குநாட்டில் வாழ்ந்திருந்த கொங்குவேள். இதனால் இதனைக் கொங்குவேள் மாக்கதை என்றும் கூறுவர். கொங்குவேள் கொங்குநாட்டு விசயமங்கலம் என்னும் ஊரில் இருந்தவர். பெருங்கதையின் தொடக்கமும் அதன் முதற்காண்டமும் இறுதிக் காண்டமும் இப்போது கிடைக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் கிடைத்துள்ளன. இந்த நூலில் திரி சொற்கள் அதிகம். சற்றுக் கடினமான நடைதான். மணிமேகலை காவியம் போலவே பெருங்கதையின் செய்யுட்கள் ஆசிரியப் பாவாலானவை. இப் பாக்களின் இறுதியில் மணிமேகலை காவியம் போன்றே 'என்' என்று முடிகின்றன. இந்த நூலைக் கொங்குவேள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில்இருந்த திருமங்கையாழ்வார் பெருங்கதையைப் படித்திருக்கிறார் என்பது அவருடைய சிறிய திருமடல் என்னும் செய்யுளில் பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிகிறோம்.

ஆரானும் ஆதானும் அல்லன் அவள்காணீர்
வாரார் வனமுலை வாசவ தத்தை என்று
ஆராலும் சொல்லப் படுவாள்- அவளுந்தன்
பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே
தாரார் தடந்தோள் தனைக்காலன் பின்போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே

(திருமங்கையாழ்வார், சிறுத்திருமடல்)

கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட மணிமேகலை காவியத்தில் பெருங்கதையின் குறிப்புக் காணப்படுகிறது (மணி மேகலை 15:58-66). அக்காலத்திலேயே பெருங்கதையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் காலத்தில்